2020ஆம் ஆண்டுக்கான ஆஸ்திரேலியன் ஓபன் தொடரின் நான்காவது சுற்றுப் போட்டியின் ஆடவர் பிரிவில் 23 வயதாகும் மெத்வதேவை எதிர்த்து 34 வயதாகும் வாவ்ரிங்கா ஆடினார்.
இரு நட்சத்திர வீரர்களுக்கு இடையிலான இந்தப் போட்டி ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது. இந்த ஆட்டத்தின் முதல் செட்டை வாவ்ரிங்கா 6-2 எனக் கைப்பற்ற, இரண்டாவது செட்டை 6-2 என மெத்வதேவ் கைப்பற்றினார். பின்னர் நடந்த மூன்றாவது செட்டையும் மெத்வதேவ் 6-4 என கைப்பற்ற, ஆட்டம் பரபரப்பானது.
பின்னர் நடந்த நான்காவது செட் ஆட்டத்தில் இரு வீரர்களும் சரிக்கு சமமாக ஆட, 6-6 என்ற நிலை ஏற்பட்டது. இதையடுத்து டை ப்ரேக்கர் முறையில் வாவ்ரிங்கா 7-2 என வெல்ல, நான்காவது செட்டை 7-6 (7-2) என்ற கணக்கில் அவர் கைப்பற்றினார்.
இதையடுத்து நடந்த ஐந்தாவது செட் ஆட்டத்தில் ஆக்ரோஷமாக ஆடிய வாவ்ரிங்கா 6-2 என்ற செட் கணக்கில் ஆட்டத்தை கைப்பற்றி, ஆஸ்திரேலியன் ஓபன் காலிறுதி சுற்றுக்கு தகுதிபெற்றார்.
இந்த ஆட்டத்தில் நான்காவது செட் ஆட்டம், போட்டியின் போக்கை மாற்றியதாக பார்க்கப்படுகிறது. இதுகுறித்து வாரிங்கா பேசுகையில், '' மிகச்சிறந்த சூழலில் வெற்றியைப் பெற்றுள்ளேன். டேனில் மெத்வதேவ் உடனான ஆட்டம் கடினமாக இருந்தது. நான்காவது, ஐந்தாவது செட்களில் நான் வெற்றிபெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இரண்டாவது, மூன்றாவது செட்களை இழந்ததால் நான் தடுமாறினேன். ஆனால் அதிலிருந்து வெளிவந்து வெற்றிபெற்றேன். இந்த ஆட்டத்தின் முடிவு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது'' என்றார்.
இதையும் படிங்க: ஆஸ்திரேலிய ஓபன்: காலிறுதிக்கு முன்னேறிய தீம், கொன்டாவிட்!