கோவிட்-19 பெருந்தொற்றுக் காரணமாக உலகம் முழுவதும் உள்ள பிரபலங்கள் தங்களை சுயத் தனிமைப்படுத்திகொள்ள முடிவுசெய்து, தற்போது அதனை செயல்படுத்திவருகின்றனர்.
இந்நிலையில் டென்னிஸ் உலகின் மகளிர் ஒற்றையர் பிரிவில் 23 முறை சாம்பியன் பட்டம் வென்ற அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ், தான் சுயத் தனிமைப்படுத்துதலை மேற்கொள்ளவுள்ளதாக கடந்த வாரம்தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து இன்று அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “இந்த கோவிட்-19 பெருந்தொற்றுக் காரணமாக நான் எடுத்த முடிவினைப்பற்றி உங்களிடம் கூறக் கடமைப்பட்டுள்ளேன். கரோனா வைரசால் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
அதில் இந்தியன் வெல்ஸ் டென்னிஸ் தொடரும் அடங்கும். அதன் பின்னர்தான் புரிந்தது இதன் தாக்கம் அதோடு நின்றுவிடப்போவதில்லை என்று. ஏனெனில் இந்தியன் வெல்ஸ் தொடர் ரத்தானதும் நான் அடுத்த தொடருக்குத் தயாராகினேன், ஆனால் பெருந்தொற்றினால் அடுத்த தொடரும் ஒத்திவைக்கப்பட்டது. தற்போது அந்த மாற்றம் அடுத்த தொடருக்கும் தொடர்கிறது.
இதன் காரணமாக கடந்த இரண்டு வாரங்களாக நான் சமூகத்திலிருந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ளேன். இதனால் சிறிய காரணங்கள்கூட தன்னை மிகவும் பயப்படுத்துகிறது. ஏனெனில் நான் தும்மும்போதும், இருமும்போதும் கரோனா தனக்கும் வந்துவிட்டதாக மனத்தில் ஒரு பயம் ஏற்படத் தொடங்கிவிட்டது. இதனால் நான் தற்போது எனது மகளைத் தொடுவதற்குக்கூட தயக்கமாகவுள்ளது. நான் இப்போது நிதானமாக இருப்பதற்கு மாறாக மிகவும் கடுமையான மன அழுத்தத்தில் இருக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.
கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக அனைத்துவகையான டென்னிஸ் தொடர்களும் ஜூன் மாதம் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:நவம்பரில் நடக்கவுள்ள பி.எஸ்.எல். ப்ளே - ஆஃப்!