2020ஆம் ஆண்டுக்கான ஆஸ்திரேலியன் ஓபன் தொடரின் ஒவ்வொரு நாளும் விறுவிறுப்பு அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இன்று நடந்த மகளிர் ஒற்றையர் பிரிவின் நான்காவது சுற்று ஆட்டத்தில் ரோமேனிய நட்சத்திர வீராங்கனை சிமோனா ஹெலப்பை எதிர்த்து பெல்ஜியத்தின் எலீஸ் மெர்டன்ஸ் ஆடினார்.
இந்த இரு வீராங்கனைகளும் கடந்த ஆண்டு கத்தார் ஓபன் தொடரில் மோதியபோது, மெர்டன்ஸிடம் சிமோனா ஹெலப் தோல்வியடைந்தார். இதனால் கத்தார் ஓபன் தோல்விக்கு சிமோனா பதிலடி கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இதையடுத்து இன்று நடந்த போட்டியின் முதல் செட் ஆட்டத்தில் சிமோனா 6-4 என ஆட்டத்தைக் கைப்பற்ற, இரண்டாவது செட் ஆட்டம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. பின்னர் நடந்த இரண்டாவது செட் ஆட்டத்தில் ஆக்ரோஷமாக ஆடிய சிமோனா 3-0 என முன்னிலைப் பெற்றார்.
ஆனால் இதற்கு பின் தனது ஆட்டத்தைத் தொடங்கிய மெர்டன்ஸ் 3-3 என சமநிலை ஏற்படுத்தினார். தொடர்ந்து 4-4 என்ற நிலை வந்தது. மீண்டும் கத்தார் ஓபன் போட்டியில் நடந்தது போல் சிமோனா இரண்டாவது செட்டை இழப்பாரோ என எதிர்பார்த்த நிலையில், அதிரடியாக ஆடி அடுத்த இரண்டு புள்ளிகளைப் பெற்று 6-4 என இரண்டாவது செட்டைக் கைப்பற்றினார். இதனால் ஆஸ்திரேலியன் ஓபன் தொடரின் காலிறுதி ஆட்டத்திற்கு சிமோனா முன்னேறினார்.
இந்த வெற்றிகுறித்து சிமோனா பேசுகையில், ''இந்தப் போட்டியின் இரண்டாவது செட் ஆட்டத்தில் 4-3 என்ற நிலை இருந்தபோது, சிறிது பதற்றமடைந்தேன். கத்தார் ஓபன் தொடரைப் போல் மீண்டும் நடந்திடக் கூடாது என நினைத்தேன். பின் என்னுடைய பதற்றத்தை வெளிக்காட்டாமல் வெற்றிபெற்றது மகிழ்ச்சியளிக்கிறது. ஒவ்வொரு முறை நான் எனது பயிற்சியாளரைப் பார்க்கையிலும் ஆஸ்திரேலியக் காட்டுத்தீயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 200 டாலர்கள் வழங்குவது சந்தோஷமாகவே உள்ளது. காலிறுதியில் வெற்றிபெற இன்னும் கூடுதலாக உழைக்கவேண்டும் என நினைக்கிறேன்'' என்றார்.
ஆஸ்திரேலியன் ஓபன் காலிறுதி ஆட்டத்தில் சிமோனா ஹெலப் எஸ்டோனியாவின் அனெட் கொண்டவெய்ட்டை எதிர்க்கவுள்ளார்.
இதையும் படிங்க: கண்ணீரோடு வெளியேறிய 15 வயது வீராங்கனை கோகோ; ரசிகர்கள் சோகம்!