2017, ஏப்ரல் மாதம் ஆஸ்திரேலியன் ஓபன் பட்டத்தை வென்ற பின், தான் 20 மாதங்களாக கர்ப்பமாக இருப்பதாகவும், இனி வரும் டென்னிஸ் தொடர்களை தவறவிடுவேன் எனவும் அறிவித்தார். இந்த அறிவிப்பு உலகத்தையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
அதேபோல் மகப்பேறுக்கு பின் மீண்டும் டென்னிஸிற்கு திரும்பமாட்டார் என எழுந்த விமர்சனங்களுக்கு, பதிலடி கொடுக்கும் வகையில் மீண்டும் களம் கண்டு அனைவரையும் இன்னும் ஆச்சரியப்படுத்தினார். அந்த நேரத்தினை எப்படி கடந்து வந்தார் என்பது குறித்து 'Being Serena' என்ற ஆவணப்படத்தில் பேசியுள்ளார்.
செரீனாவுக்கு செப்.1ஆம் தேதி மகள் பிறந்தார். பிரசவத்தின்போது நுரையீரல் தக்கையடைப்பு காரணமாக செரீனாவுக்கு அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்தது. அந்தப் பிரசவத்திற்குப் பின், அவர் மற்றொரு நுரையீரல் தக்கையடைப்புக்கு ஆளானார். படுக்கையிலேயே இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டதால், டென்னிஸ் பயிற்சிக்கு திரும்ப இன்னும் 6 வாரம் தேவைப்பட்டது.
இந்த ஆவணப்படத்தில் சர்வதேச டென்னிஸ் ஜாம்பவான்கள் பலரும் செரீனாவின் வாழ்க்கைப் பயணத்தைப் பற்றி உயர்வாக பேசியுள்ளனர்.
அதில், '' நான் என் மகளை பெற்றெடுப்பதற்கு முன்னதாக பல தடைகள் வந்தது. கிட்டத்தட்ட செத்து பிழைத்தேன். ஆனால் இப்போது அவள் முன்பு செய்ததை விட அதிகமாக இருக்கிறாள். ஆனால் இன்னும் அந்த பயம் அப்படியே தான் இருக்கிறது.
என்னால் நல்ல தாயாகவும், நல்ல டென்னிஸ் வீராங்கனையாகவும் இருக்க முடியுமா என்பது தான் என் பயம். மீண்டும் இந்த பயம் வருமா என தெரியாது.
ஒலிம்பியா பிறப்பதற்கு முன்பாகவே அவள் ஆஸ்திரேலியன் ஓபன் தொடரை பார்க்க வேண்டும் என்று நினைத்தேன். அவள் என்னுள் இருப்பதால், நான் வெற்றிபெறுவதை தடுக்க முடியாது என்பது அவளுக்கு தெரிய வேண்டும். அதற்காக தான் ஆஸி. ஓபனில் ஆடினேன்.
ஒவ்வொருவரும் எங்கிருந்து வருகிறோம் என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். ஏனென்றால் நாம் எங்கிருந்து வருகிறோம் என்பதை வைத்து தான் நாம் யார் என்பது தெரியும். நான் இங்கிருந்து வரவில்லை. நான் கலிஃபோர்னியாவின் காம்ப்டனில் இருந்து வந்தவள். எனக்கு கிடைத்த அனைத்திற்கும் என் குடும்பம் கடுமையாக உழைக்க வேண்டும். எங்கள் வீட்டு வாசலுக்கு வெளியே வளர்ந்து வரும் அனைத்து வகையான கும்பல்கள், கொள்ளைகள், கொலை, துப்பாக்கிச்சூடுகள் பற்றி நாங்கள் கவலைப்பட வேண்டியிருந்தது. அதிகமானவற்றைப் பார்த்து பயம் கொள்ள வேண்டியிருந்தது. அதிகமாக ஓட வேண்டியிருந்தது. ஆனால், அந்த பயம் தான் எங்களை முன் நகர்த்தியது. நாங்கள் வெற்றிபெறுவதையும், முன்னேறுவதையும் நிறுத்தவே இல்லை.
Being Serena என் மனதிற்கு நெருக்கமான ஒன்று. இது என் வாழ்வில் நடந்த மறக்க முடியாத நினைவுகளையும், சவால்களை நேர்த்தியாகவும் உண்மையாகவும் காட்சிப்படுத்தியுள்ளது. குழந்தைப் பிறப்பிற்கு பின் மீண்டும் வேலைக்கு திரும்பிய அனைத்து பெண்களுக்கு இதனை சமர்ப்பிக்கிறேன்'' என்றார்.
இதையும் படிங்க:ஆஸ்திரேலியா - இந்தியா ஒருநாள் தொடர் : புள்ளிவிவரங்கள் மூலம் ஒரு பயணம்!