மகளிருக்கான ஹோபர்ட் இன்டர்நேஷன்ல் டென்னிஸ் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரின் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா - உக்ரைனின் நடியா கிச்னோக் இணை பங்கேற்றது. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்த இணை காலிறுதிப் போட்டிவரை முன்னேறியது.
இதனிடையே இன்று நடைபெற்ற காலிறுதிப் போட்டியில் சானியா மிர்சா - நடியா கிச்னோக் இணை அமெரிக்காவின் வானியா கிங் - கிறிஸ்டினா மெக்காலே ஜோடியை எதிர்த்து விளையாடியது. மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியின் முதல் செட்டை 6-3 என சானியா இணையும், இரண்டாவது செட்டை 6-3 என அமெரிக்க இணையும் கைப்பற்றின.
இதனால் 1-1 என்ற கணக்கில் போட்டி சமநிலை வகிக்க வெற்றியாளரைத் தீர்மானிக்கும் இறுதி மற்றும் மூன்றாவது செட்டில் சானியா - கிச்னோக் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 10-4 என்ற கணக்கில் அந்த செட்டை கைப்பற்றி வெற்றியைப் பதிவு செய்தனர். இதன்மூலம் அவர்கள் அரையிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றனர். அரையிறுதியில் சானியா - கிச்னோக் இணை, ஸ்லோவேனியன் - செக் குடியரசு ஜோடியான தமாரா ஸிடான்செக், மேரி போஸ்கோவா ஆகியோரை எதிர்த்து விளையாடுகிறது.