டென்னிஸ் விளையாட்டின் ராஜாவாகத் திகழவேண்டும் என்றால், இந்த நான்கு பட்டங்களைக் கைப்பற்றவேண்டும். ஆஸ்திரேலியன் ஓபன், யுஎஸ் ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன் ஆகிய நான்கையும் கைப்பற்றினால் டென்னிஸ் உலகின் முடிசூடா மன்னனாகவே வலம் வரலாம். இதில் நான்கு கிராண்ட்ஸ்லாம் தொடரில் ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்திலும் ஆஸ்திரேலியன் ஓபன் தொடர் நடக்கும்.
ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் தொடரைக் கைப்பற்றவேண்டும் என அனைத்து வீரர்களும் முழுமையான திறனை வெளிப்படுத்துவார்கள். இதனால் ஆஸ்திரேலியன் ஓபன் தொடரினைக் கைப்பற்றுவது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. ஆனால், இதனை 2017,2018 ஆகிய ஆண்டுகளில் வயசான போதும், அசால்ட்டாகக் கைப்பற்றி ராஜாவாக வலம் வந்தவர், ரோஜர் ஃபெடரர். ஆனால், 2019ஆம் ஆண்டில் ஒரு கிராண்ட்ஸ்லாம் பட்டத்தையும் கைப்பற்றாததால், நடால் மற்றும் ஜோகோவிச் ஃபெடரரை மிஞ்சிவிட்டார்கள் என டென்னிஸ் உலகம் பேசத்தொடங்கியது. ஆனால், ஃபெடரர் தொடர்ந்து அவர்களுக்கு எதிராகப் போராடியே தோல்வியடைந்தார்.
தற்போது 2020ஆம் ஆண்டுக்கான ஆஸ்திரேலியன் ஓபன் தொடர் நடந்துவருகிறது. இதன் மூன்றாவது சுற்றில் மில்மேனை எதிர்த்து ஆடும்போது ஐந்தாவது செட்டில் தான் வெற்றியைக் கைப்பற்றினார், ஃபெடரர். அதேபோல் நான்காவது சுற்று ஆட்டத்தில் நான்காவது செட்டில் தான் வெற்றியைக் கைப்பற்றினார், ஃபெடரர். இந்த இரு போட்டிகளுக்கும் இருக்கும் ஒற்றுமை என்னவென்றால் ஃபெடரர் இந்த இரு போட்டிகளிலும் முதல் செட்டை இழந்து, அதன் பின் மீண்டு வென்றார்.
இந்நிலையில் இன்று காலிறுதி ஆட்டம் நடந்தது. இதில் அமெரிக்காவின் டென்னிஸ் சாண்ட்கிரனை எதிர்த்து ரோஜர் ஃபெடரர் ஆட, ரசிகர்கள் ராட் லேவர் அரேனாவில் ஆர்ப்பரித்தனர்.
முதல் செட் ஆட்டத்தில் வழக்கம்போல் அல்லாமல் ஃபெடரர் 6-3 என்ற செட்டில் முன்னிலைப் பெற்றார். ஆனால், இரண்டாவது மற்றும் மூன்றாவது செட்களில் 6-2, 6-2 என ஃபெடரர் பின்னடைந்தார். இதனால் ஃபெடரரின் வயது குறித்த பேச்சுகள் சமூக வலைதளங்களில் மீண்டும் தலைதூக்கியது.
சாண்ட்கிரன் ஒரு செட்டைக் கைப்பற்றினால் தனது வாழ்நாளில் முதல் முறையாக கிராண்ட்ஸ்லாம் தொடரின் அரையிறுதியில் கால்பதிக்கலாம். கண்ணுக்கு அருகில் வெற்றி உள்ளது. ஆனால் ஃபெடரரிடம் வெற்றிபெறுவது எளிதானதல்ல.