இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உலகின் முன்னணி ஆடவர் டென்னிஸ் நட்சத்திரங்கள் மட்டும் கலந்து கொள்ளும் ஏடிபி டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற சுவிஸ்நாட்டு நட்சத்திர ரோஜர் ஃபெடரர், உலகின் இரண்டாம் நிலை வீரரான செர்பியாவின் நோவாக் ஜோகோவிச்சை எதிர்கொண்டார்.
மிகுந்த எதிர்பார்ப்புடன் தொடங்கிய இந்த ஆட்டத்தின் தொடக்கம் முதலே தனது அனுபவத்தை வெளிப்படுத்திய ஃபெடரர் முதல் செட்டை 6-4 என்ற கணக்கில் கைப்பற்றி ஜோகோவிச்சிற்கு அதிர்ச்சியளித்தார்.
அதனைத் தொடர்ந்து பரபரப்பாக தொடங்கிய இரண்டாவது செட்டிற்கான ஆட்டத்திலும் பின் வாங்காத ஃபெடரர் 6-3 என்ற கணக்கில் இரண்டாவது செட்டையும் கைப்பற்றி அசத்தினார்.
இதன் மூலம் ஏடிபி பைனல்ஸ் டென்னிஸ் தொடரில் லீக் ஆட்டத்தில் ரோஜர் ஃபெடரர் 6-4, 6-3 என்ற நேர் செட் கணக்குகளில் நோவாக் ஜோகோவிச்சை வீழ்த்தி இத்தொடரின் அரையிறுதி வாய்ப்பை உறுதிப்படுத்தியுள்ளார்.
முன்னதாக இவர்கள் இருவரும் ஜூலை மாதம் லண்டனில் நடைபெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் இறுதிப்போட்டியில் மோதினர். டை பிரேக்கர் வரை சென்ற அப்போட்டியில் ஜோகோவிச் 7-6, 1-6, 7-6, 4-6, 13-12 என ஃபெடரரை வெற்றி பெற்றார். சுமார் நான்கு மணி நேரம் 57 நிமிடங்களுக்கும் மேலாக நடைபெற்ற இப்போட்டியே விம்பிள்டன் வரலாற்றில் நீண்ட நேரம் நீடித்த போட்டியாகும்.
தற்போது விம்பிள்டனில் ஏற்பட்ட தோல்விக்கு பதிலடியாக ஏடிபி பைனல் டென்னிஸ் தொடரில் ஜோகோவிச்சை வீழ்த்தி பழிதீர்த்து கொண்டார் ஃபெடரர்.
இதையும் படிங்க: டென்னிஸ்: ஜோகோவிச்சை அடிக்க ஃபெடரருக்கு வாய்ப்பு