டென்னிஸில் இந்த ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் தொடர் மெல்போர்னில் நடைபெற்றுவருகிறது. இதில், இன்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு நான்காம் சுற்று போட்டியில் நடப்பு சாம்பியனும் செர்பியாவின் நட்சத்திர வீரரான நோவாக் ஜோகோவிச், 14ஆம் நிலை வீரரான அர்ஜென்டினாவின் டியாகோ ஸ்வார்ட்ஸ்மேனுடன் மோதினார்.
இதில், வழக்கம்போல் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜோகோவிச் 6-3, 6-4, 6-4 என்ற நேர் செட் கணக்கில் டியாகோ ஸ்வார்ட்ஸ்மேனை வீழ்த்தி 11ஆவது முறையாக இந்தத் தொடரில் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
இதேபோல் நடைபெற்ற மற்றொரு நான்காம் சுற்றுப் போட்டியில் கனடாவின் மிலாஸ் ரோனிக் 6-4, 6-3, 7-5 என்ற நேர் செட் கணக்கில் குரோஷியாவின் மரின் சிலிச்சை வீழ்த்தி காலிறுதிச் சுற்றுக்குள் நுழைந்தார்.
இதைத்தொடர்ந்து, வரும் 28ஆம் தேதி நடைபெறவுள்ள காலிறுதி போட்டியில் உலகின் இரண்டாம் நிலை வீரரான ஜோகோவிச், மிலாஸ் ரோனிக்குடன் மோதவுள்ளார். இதுவரை ஏழுமுறை ஆஸ்திரேலிய ஓபன் தொடரை வென்றுள்ள ஜோகோவிச் இம்முறை எட்டாவது முறையாகச் சாம்பியன் பட்டத்தை வெல்வாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இதையும் படிங்க:ஆஸ்திரேலியா ஓபனில் சதமடித்து அசத்திய ஃபெடரர்!