ஆண்டின் முதலாவது கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரான ஆஸ்திரேலியன் ஓபன் தொடர் பிப்ரவரி 8ஆம் தேதி மெல்போர்னில் தொடங்கவுள்ளது. இந்நிலையில், ஆஸ்திரேலியாவில் அதிகரித்து வரும் கரோனா பரவல் காரணமாக வீரர்களுக்கு கடுமையான பாதுகாப்பு நெறிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளன.
ஆஸ்திரேலிய டென்னிஸ் கூட்டமைப்பின் இந்த விதிமுறைகளால், நட்சத்திர வீரர்கள் பலரும் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தி வந்தனர். இந்நிலையில் உலகின் முன்னணி டென்னிஸ் வீரரான ரஃபேல் நடால், இந்த கரோனா பாதுகாப்பு நெறிமுறைகளுக்கு ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய நடால், "கடந்த வாரம் ஆஸ்திரேலியாவின் கரோனா பாதுகாப்பு நெறிமுறைகள் பற்றிய எனது கருத்துக்கு உங்களிடம் மன்னிப்பு கோருகிறேன். நாங்கள் இங்கு வரும்போது, பாதுகாப்பு நடைமுறைகள் கடுமையானதாக இருக்கும் என தெரியும். ஏனெனில் இங்கு வைரஸ் பரவலின் தாக்கம் அதிகரித்து வருகிறது.
அதனால் இது வழக்கத்தை விட சற்று வித்தியாசமானதாக இருக்கிறது. இருப்பினும் எங்களுக்கு இப்போது இங்கு விளையாட ஒரு வாய்ப்பு இருக்கிறது. உலகம் முழுவதும் இந்த தொற்றினால் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளதால், பாதுகாப்பு நெறிமுறைகள் குறித்து நாங்கள் புகார் செய்ய முடியாது" என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: செல்சி அணியின் புதிய பயிற்சியாளராக தாமஸ் டச்செல் நியமனம்!