நடப்பு ஆண்டின் இறுதி கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரான யு.எஸ். ஓபன் தொடர் நியூயார்க்கில் நடைபெற்றுவருகிறது. இதில், ஆடவர் ஒற்றையர் பிரிவு அரையிறுதிப் போட்டியில் ஸ்பெயினின் நட்சத்திர வீரர் ரஃபேல் நடால், இத்தாலி வீரர் மேட்டியோ பெரிட்டினியுடன் (Matteo Berrettini) மோதினார்.
முதல் செட்டில் இரு வீரர்களும் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி புள்ளிகளை போட்டிபோட்டுக்கொண்டு பெற்றனர். இறுதியில், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நடால் டை பிரேக்கர் முறையில் 7-6 என்ற கணக்கில் முதல் செட்டை வென்றார்.
இதைத்தொடர்ந்து, தனது ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்திய நடால் 6-4 என்ற கணக்கில் இரண்டாவது செட்டை கைப்பற்றினார். பின்னர் 6-1 என்ற கணக்கில் மூன்றாவது செட்டை லாவகமாக வென்றார். இதன்மூலம் நடால், 7-6, 6-4, 6-1 என்ற நேர் செட் கணக்கில் வெற்றிபெற்று ஐந்தாவது முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார்.
இதைத்தொடர்ந்து, நாளை நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் அவர் ரஷ்ய வீரர் மெட்வதேவ் உடன் பலப்பரீட்சை நடத்தவுள்ளார். இதுவரை 18 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற நடால், நாளை நடைபெறும் போட்டியில் வெற்றிபெற்று 19 பட்டங்களை வெல்வாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களின் மத்தியில் எழுந்துள்ளது.