லியாண்டர் பயஸ் மூலம் இந்தியாவில் டென்னிஸ் போட்டி பிரபலம் அடைந்தது என்று கூறலாம். 1973இல் பிறந்த இவர் தனது 16ஆவது வயதில் சர்வதேச அளவிலான டென்னிஸ் தொடர்களில் விளையாட தொடங்கினார். அன்று இவர் எடுத்த டென்னிஸ் ராக்கெட் தொடர்ந்து 30 ஆண்டுகளுக்கும் மேலாக பல வெற்றி, தோல்விகளைச் சந்தித்துள்ளது. தற்போது 46 வயதனா இவர், நடப்பு ஆண்டின் இறுதியில் தான் ஓய்வு பெறுவதாக அறிவித்திருப்பது இந்திய டென்னிஸ் ரசிகர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது புனேவில் நடைபெற்றுவரும் மகாராஷ்டிரா ஓபன் தொடரின் இரட்டையர் பிரிவில் காலிறுதிச் சுற்றுக்கு அவர் முன்னேறியுள்ளார். இதைத்தொடர்ந்து, வரும் பிப்ரவரி 10ஆம் தேதி நடைபெறவுள்ள பெங்களூரு ஓபன் ஏடிபி சேலஞ்சர் தொடரின் ஆடவர் இரட்டையர் பிரிவில் பங்கேற்கிறார். இந்திய மண்ணில் அவர் பங்கேற்கும் கடைசி தொடர் இதுவாகும்.
சொந்த மண்ணில் பங்கேற்கும் தனது கடைசி தொடர் குறித்து அவர் கூறுகையில்,
"சொந்த மண்ணில் ரசிகர்கள் முன்னிலையில் விளையாடுவது எனக்கு எப்போதும் மகிழ்ச்சியும் உத்வேகமும் அளிக்கிறது. பெங்களூருவில் உள்ள ரசிகர்கள் எப்போதும் டென்னிஸ் போட்டியை நன்கு புரிந்துகொள்வார்கள். அரங்கத்தில் அவர்கள் எழுப்பும் கரகோஷம் என்னை இன்னும் சிறப்பாக விளையாடத் தூண்டும் வகையில் இருக்கும். கடைசியாக ஒருமுறை உங்களை மகிழ்விக்க நான் வருகிறேன்" என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
மார்டின ஹிங்கிஸுடன் 2015இல் யுஎஸ் ஓபன் கலப்பு இரட்டையர் தொடரை வென்ற பயஸ் 1996இல் ஒலிம்பிக்கின் ஒற்றையர் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றதன் மூலம், ஒலிம்பிக் டென்னிஸ் பிரிவில் பதக்கம் வென்ற ஒரே இந்தியர் என்ற வரலாற்றுச் சாதனையை படைத்தார்.
இதுமட்டுமின்றி ஆடவர் இரட்டையர் பிரிவில் அவர் 54 பட்டங்கள், எட்டு கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள், கலப்பு இரட்டையர் பிரிவில் 10 கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் என பல்வேறு தொடர்களை வென்று தனது 30 ஆண்டுகால டென்னிஸ் வாழ்க்கையை மறக்க முடியாத தருணங்களாக அவர் மாற்றியுள்ளார்.
இதையும் படிங்க:ரோஜர் ஒயின் போன்றவர்... இனிதான் ஆட்டம் இருக்கு