தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

டேவிஸ் கோப்பை டென்னிஸ்: ஓராண்டுக்குப்பின் இந்திய அணியில் லியாண்டர் பயஸ் - லியாண்டர் பயஸ்

இரட்டையர் டென்னிஸ் ஆட்டத்தில் பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ள லியாண்டர் பயஸ் ஓராண்டுக்குப்பின் மீண்டும் இந்திய அணிக்கு திரும்பியுள்ளார்.

paes

By

Published : Nov 15, 2019, 11:24 AM IST

பாகிஸ்தானுக்கு எதிரான டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடரில் இந்தியா - பாகிஸ்தான் மோதும் டை போட்டிகள் இம்மாத இறுதியில் 29, 30 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இந்தத் தொடருக்கான இந்திய அணியை அகில இந்திய டென்னிஸ் கூட்டமைப்பு நேற்று அறிவித்தது.

முன் எப்போதும் இல்லாத அளவிற்கு இம்முறை எட்டு பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சுமித் நாகல், ராம்குமார் ராமநாதன், சசி குமார் முகுந்த், சகித் மைனேனி, ரோகன் போபண்ணா, லியாண்டர் பயஸ், ஜீவன் நெடுஞ்செழியன், சித்தார்த் ராவத் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இவர்களில் சுமித் நாகல், ராம்குமார், முகுந்த், மைனேனி ஆகியோர் ஒற்றையர் பிரிவுப் போட்டிக்காகவும், ரோஹன் போபண்ணா, லியாண்டர் பயஸ், நெடுஞ்செழியன் ஆகியோர் இரட்டையர் பிரிவு ஆட்டங்களுக்காகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இதன்மூலம் அனுபவ வீரர் லியாண்டர் பயஸ், ஓராண்டுக்குப்பின் இந்திய அணியில் விளையாடவுள்ளார். அவர் கடந்தாண்டு சீன அணிக்கு எதிரான இரட்டையர் போட்டியில் பங்கேற்றதே இந்திய அணிக்காக அவர் விளையாடிய கடைசிப் போட்டியாகும். பயஸ் அப்போட்டியில் போபண்ணாவுடன் இணைந்து, ஜி ஜாங் - மாவோ ஜின் காங் இணையை வீழ்த்தி டேவிஸ் கோப்பை தொடரில் அதிக வெற்றிபெற்ற (43) வீரர் என்ற சாதனையைப் படைத்தார்.

முன்னதாக டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடர் பாகிஸ்தானில் நடைபெறுவதால் பாதுகாப்பு காரணங்களுக்காக அங்கு செல்ல மாட்டோம் என முன்னணி டென்னிஸ் வீரர்கள் பலரும் தெரிவித்துவிட்டனர். இதைத் தொடர்ந்து பயஸ் உள்ளிட்ட சில வீரர்கள் மட்டும் இதில் பங்கேற்க விருப்பம் தெரிவித்தனர்.

எனவே டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டிகளை பாகிஸ்தானிலிருந்து வேறு பொதுவான இடத்திற்கு மாற்றுமாறு இந்திய டென்னிஸ் கூட்டமைப்பு சர்வதேச டென்னிஸ் கூட்டமைப்பிடம் கோரிக்கைவிடுத்தது.

இதைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு மாற்று இடத்தை தேர்வு செய்ய அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் பாகிஸ்தான் டென்னிஸ் கூட்டமைப்பு மாற்று இடத்தை அறிவிக்காமல் சர்வதேச கூட்டமைப்பின் கோரிக்கையை எதிர்த்து போட்டியை திட்டமிட்டபடி இஸ்லாமாபாத்திலேயே நடத்த முறையீடு செய்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details