உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியன்று லண்டன் மாநகரில் மற்றொரு விளையாட்டான விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டியை உலகமே எதிர்பார்த்தது. ஏனென்றால் அந்தப் போட்டியில் டென்னிஸின் மாமன்னான ஃபெடரரும், டென்னிஸின் அசுரன் என அழைக்கப்படும் ஜோகோவிச்சும் களம் கண்டிருந்தனர். இதனால் டிவியில் கிரிக்கெட்டையும், செல்போனில் டென்னிஸையும் ரசிகர்கள் பார்த்துக்கொண்டிருந்தனர்.
90ஸ் கிட்ஸ்களுக்கு ஃபெடரரும், நடாலும்தான் ஹீரோக்கள். டென்னிஸ் விளையாட்டே தங்களுக்கு மட்டுமே நேந்துவிடப்பட்டது என்பதைப் போல் தொடர்ந்து அனைத்து கிராண்ட்ஸ்லாம் பட்டங்களையும், கோப்பைகளையும் கைப்பற்றி அசாதரணமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஆனால் இவை அனைத்தும் ஜோகோவிச் என்ற வீரர் வெளிப்படும் வரைதான். இருமுனைப் போட்டியை கண்ட ரசிகர்கள், ஜோகோவிச்சின் வருகையும் அவர் வெளிப்படுத்திய தனித்துவமான ஆட்டமும் மும்முனை போட்டி வந்துவிட்டது என ரசிகர்களை நினைக்க வைத்தது.
டென்னிஸ் என்பது முழுக்க முழுக்க மன உறுதியை கேள்விக்குள்ளாக்கும் விளையாட்டு. இங்கே முதல் செட்டை கோட்டைவிட்டால் மீண்டு வருவதற்குள் எதிரி நம்முடைய மன உறுதியை எளிதாக மேலும் பலவீனமடைய செய்துவிடுவார். அந்த 78 அடி அங்குல டென்னிஸ் கோர்ட், நம் மன உறுதியை அதிகரிக்கவும் செய்யும், சுக்குநூறாக உடைத்துபோடவும் செய்யும்.
அப்படிப்பட்ட விளையாட்டில் நடாலும், ஃபெடரரும் கோலோச்சியிருந்த காலத்தில் ஜோகோவிச் வந்தார். நடாலுக்கு உடல் உழைப்பு பலம் என்றால், ஜோகோவிச்சிற்கு மன உறுதிதான் பலம். கிட்டத்தட்ட டிராவிட்டை போல் தடுப்பாட்டத்தின் மூலம் எதிரில் ஆடும் வீரர்களின் மன உறுதியை உடைத்து வெற்றி காண்பார். அதுதான் ஜோகோவிச்...!
செர்பியாவில் பிறந்த ஜோகோவிச், சிறு வயது முதலே போர்களுக்கு நடுவில் வாழ்ந்ததால், போராடுவதற்கு கற்றுகொண்டவர். போர் காலத்தில் சரியான தூக்கம் இருக்காது, சரியான சாப்பாடு கிடைக்காது, ஏன் குழுந்தைகள் பள்ளிக்கும் செல்ல முடியாது.
இதனை குழந்தை பருவத்திலேயே சந்தித்த ஜோகோவிச், இவை அனைத்தையும் பாசிட்டிவாக எடுத்துக்கொண்டார். டென்னிஸ் கோர்ட்டில் விளையாட முடியாமல் ஸ்விம்மிங் ஃபூலில் டென்னிஸ் பயிற்சிகளை மேற்கொண்டார். அதுகுறித்து அவர் பேசியபோது, பள்ளிக்கு செல்லாத நாளில்தான் அதிகமான பயிற்சிகளை ஸ்விம்மிங் ஃபூலில் மேற்கொண்டேன் என்பார்.
போரின் சூழல் ஜோகோவிச்சின் மனதில் மிகப்பெரிய உறுதியை ஏற்படுத்தியது. அந்த சூழல்தான் ஜோகோவிச்சை போராடும் வீரனாக மாற்றியது. பாரம்பரியமான டென்னிஸ் குடும்பத்தில் ஜோகோவிச் பிறக்கவில்லை. ஏன் டென்னிஸ் ராக்கெட்டை அவர் குடும்பத்தில் யாரும் தொட்டுக்கூடப் பார்க்கவில்லை. ஆனால் உலகின் நம்பர் 1 வீரனாக வரவேண்டும் என 7 வயதில் நினைத்ததை ஜோகோவிச் இன்று சாதித்துள்ளார்.
சில ஆண்டுகளுக்கு முன்னதாக ஜோகோவிச் தொடர் வெற்றிகளைப் பெற்றாலும் ரசிகர்கள் ஃபெடரர், நடாலுக்குதான் தொடர்ந்து ஆதரவு அளித்தனர். அப்போது 2010ஆம் ஆண்டுவரை ஜோகோவிச் பெரிய தொடர்களில் வெற்றிகளை பெறாததும் அதற்கு ஒரு காரணமாகப் பார்க்கப்பட்டது. ஆனால் 2011ஆம் ஆண்டில் எந்த பெரிய தொடர்களை வெல்லவில்லை என விமர்சிக்கப்பட்டாரோ, அடுத்தடுத்து மூன்று கிராண்ட்ஸ்லாம் தொடர்களான ஆஸ்திரேலிய ஓபன், விம்பிள்டன், யு.எஸ். ஓபன் என கைப்பற்றி ஃபெடரர், நடால் ஆகியோரின் வெற்றிகளுக்கு சவாலளித்தார்.
இந்த வெற்றிகளுக்கு காரணமாக பேசப்பட்டது ஜோகோவிச்சின் மன வலிமை. மற்ற வீரர்களைப்போல் பாயிண்ட்டுக்காக ஆசைப்பட்டு தவறு செய்யும் வீரர் அல்ல அவர். எதிரியின் தவறுக்காக காத்திருப்பவர். 2011ஆம் ஆண்டில் ஜோகோவிச்சின் ஆட்டத்தைப் பார்த்து அமெரிக்க முன்னாள் டென்னிஸ் வீரர் சாம்ப்ராஸ், ஜோகோவிச் வாழ்வின் மிகச்சிறந்த ஆட்டம் இந்த வருடத்தில்தான் வெளிவந்துள்ளது என்றார்.
தனது வெற்றிக்கு எதிராக நடால் வந்தால் என்ன... ஃபெடரர் வந்தால் என்ன.. ஒரு கை பார்த்துவிடுவோம் என்ற எண்ணத்தோடு ஆடியதைப் போல் இருவரையும் ஒரு கைப் பார்த்துவிட்டார் என்றே சொல்லலாம். அதுவரை மட்டும் ரஃபேல் நடால் என்னும் மாவீரனை ஆறுமுறை இறுதிப் போட்டிகளில் வென்றார்.
ஆனால் ஜோகோவிச் உச்சம் எட்டியது என்னவோ 2012ஆம் ஆண்டு நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபன் தொடரில்தான். கிராண்ட்ஸ்லாம் தொடரான ஆஸ்திரேலிய ஓபனில் டிஃபண்டிங் சாம்பியனாக களமிறங்கிய ஜோகோவிச்சை யாரும் பட்டத்தை தக்க வைப்பார் என எண்ணிப்பார்க்கவில்லை. ஏனென்றால், நடால் அந்த தொடரில் வெளிப்படுத்திய ஆட்டம் அப்படி.
உலகின் நம்பர் 1, நம்பர் 2 இடங்களில் உள்ள வீரர்கள் மோதும் ஆட்டம் என்பதால் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவியது. அந்த ஆட்டத்தின் முதல் சுற்றே டை ப்ரேக்கர் வரை சென்று நடால் கைப்பற்ற, ரசிகர்களின் கரகோஷம் நடாலுக்கு சாதகமாக சென்றது.
அடுத்த இரண்டு, மூன்றாவது சுற்றை ஜோகோ கைப்பற்றியபின், எளிதாக வெல்வார் என எதிர்பார்க்கப்பட்டபோது நடால் என்னும் போர்வீரன் வெளியே வந்தான். நான்காவது செட்டில் நடால் ஆடிய ஆட்டம் வெறித்தனத்தின் உச்சம். நான்காவது செட்டைக் கைப்பற்றிவிட்டு நடால் வெற்றிபெற்றதற்கு இணையான மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். கடைசி செட் ஆட்டம் தொடர்ந்தது. வெற்றியாளனைத் தீர்மானிக்கும் ஆட்டம். ரசிகர்கள் ஒவ்வொருவரும் வரலாறு படைக்கப்பட்டு வருவதை கண் இமைக்காமல் பார்த்து வருகின்றனர்.