ஆஸ்திரேலியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயால் சுமார் 19.8 மில்லியன் ஏக்கர் நிலங்கள் தீக்கிரையாகியுள்ளன. இந்த காட்டுத்தீக்கு இதுவரை 25 பேர் உயிரிழந்தனர். இதனால் 67 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வேறு இடங்களுக்கு மாற்றமடைந்துள்ளனர். இதுமட்டுமல்லாமல் கிட்டத்தட்ட லட்சக்கணக்கான உயிரினங்கள், விலங்குகள், பறவைகள் உயிரிழந்துள்ளன. இது உலக மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆஸ்திரேலியாவில் காட்டுத்தீ பரவுவது ஒவ்வொரு வருடமும் நிகழ்வது தான். ஆனால் இந்த ஆண்டு காட்டுத்தீ பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் காட்டுத்தீயை அணைக்க, தீயணைப்பு வீரர்கள், ராணுவம், தன்னார்வலர்கள் என பெரும் படையே போராடி வருகிறது. இதனால் காற்றில் ஏற்பட்டுள்ள மாசு அதிகளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த காட்டுத்தீயில் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்காக பல்வேறு நாடுகளிலும் நிதி திரட்டப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இந்த மாதம் ஆஸ்திரேலியாவில் பிரபலமான ஆஸ்திரேலியா ஓபன் தொடர் நடைபெறவுள்ளது. இந்தத் தொடரில் பல்வேறு வெளிநாட்டு வீரர்களும், வீராங்கனைகளும் பங்கேற்கவுள்ளனர். இவர்களுடன் ஆஸ்திரேலிய டென்னிஸ் வீரர் நிக் கிர்ஜியோஸ் நிவாரண நிதி வழங்கக்கோரி கோரிக்கை விடுத்திருந்தார். இதனை மகளிர் வீராங்கனைகளான ஆஷ்லி பார்ட்டி, சிமோனா ஹெலப் ஆகியோர் பாராட்டி அனைவரும் நிவாரணம் அளிக்க முன்வருமாறு கோரிக்கை விடுத்தனர்.