சுவிட்சர்லாந்தின் நட்சத்திர டென்னிஸ் வீரரான ரோஜர் பெடரர், டென்னிஸ் உலகில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். உலகின் ஐந்தாம் நிலை வீரராக இருக்கும் பெடரர், மொத்தமாக 20 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்ற ஒரே ஆடவர் டென்னிஸ் வீரர் என்ற சாதனையை தன்வசம் வைத்துள்ளார். ஆஸ்திரேலியன் ஓபன், பிரஞ்ச் ஓபன், விம்பிள்டென், அமெரிக்கன் ஓபன் என உலகின் பெரிய டென்னிஸ் தொடர்களிலும் இவர் கோப்பையை வென்றுள்ளார்.
37 வயதான பெடரர் சமீபத்தில் துபாய் ஓபன் டென்னிஸ் சாம்பியன்ஸிப் தொடரின் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில், சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார். இதன்மூலம், டென்னிஸ் ஒற்றையர் பிரிவு போட்டிகளில் 100 ஏடிபி பட்டங்களை கைப்பற்றிய இரண்டாவது வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார். முன்னதாக அந்த சாதனையை அமெரிக்க டென்னிஸ் வீரர் ஜிம்மி கானோர்ஸ் (109 பட்டங்கள்) படைத்திருந்தார்.