கரோனா வைரஸ் காரணமாக உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். இப்பேருந்தொற்றின் அச்சுறுத்தல் காரணமாக உலகம் முழுவதும் பல்வேறு வகையான விளையாட்டுப்போட்டிகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.
இதன் ஒரு பகுதியாக டென்னிஸ் விளையாட்டு போட்டியில் விம்பிள்டன், பிரெஞ்ச் ஓபன், அமெரிக்க ஓபன் உள்ளிட்ட தொடர்களும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து காணொலி நேரலை மூலம் செய்தியாளர்களை சந்தித்த நட்சத்திர டென்னிஸ் வீரர் ரஃபேல் நடால், நிலைமை சீராகும்வரை டென்னிஸ் தொடர்கள் நடைபெறாது என தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், "தற்போதுள்ள சூழ்நிலையில் டென்னில் தொடர்களை மீண்டும் நடத்துவது இயலாத ஒன்று. ஏனெனில், வீரர்களின் உடல்நிலை மற்றும் அவர்களின் பாதுகாப்பு காரணங்களுக்காக இதனை செய்வது சாத்தியமில்லை. ஒருவேளை வீரர்கள் டென்னிஸ் தொடர்களில் பங்கேற்க வேண்டுமனால், அவர்களின் சொந்த பாதுகாப்பில்தான் சென்று விளையாடவேண்டும்.
மேலும், மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பும் வரை நாங்கள் காத்திருக்க வேண்டும். அதேசமயம் இரண்டு மாதங்களில் நியூயார்க்கில் நிலைமை எவ்வாறு இருக்கும் என்பதையும் நாங்கள் பார்க்க வேண்டும். ஏனெனில், நியூயார்க், வைரஸால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள இடங்களில் ஒன்றாகும்.
தற்போது என்னால் விளையாட்டு போட்டிகள் குறித்து சிந்திக்க இயலவில்லை. காரணம், நாம் எப்போது பழைய நிலைக்கு திரும்புவோம் என்பது குறித்தே நான் சிந்தித்து வருகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.