ஏடிபி சார்பில் ஆண்டின் இறுதியில் ஆடவர் டென்னிஸ் வீரர்களுக்காக நடத்தப்படும் பாரிஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடர் ஃபிரான்ஸின் பாரிஸ் நகரில் நடைபெற்றுவருகிறது. இந்தத் தொடரில் உலகின் பல முன்னணி வீரர்களும் பங்கேற்றுள்ளனர். முன்னதாக இந்தத் தொடரிலிருந்து நட்சத்திர வீரர் ரோஜர் ஃபெடரர் விலகினார்.
இதனிடையே இன்று நடைபெற்ற போட்டியில் ஸ்பெயினின் ரஃபேல் நடால் சுவிட்சர்லாந்தின் ஸ்டான் வாவ்ரின்காவை எதிர்கொண்டார். இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நடால் 6-4, 6-4 என்ற செட்கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். இதுவரை இவர்கள் இருவருக்கும் இடையே நடைபெற்ற 22 போட்டியில் நடால் 19 போட்டியிலும், வாவ்ரின்கா மூன்றிலும் வெற்றி பெற்றுள்ளனர். அவர் காலிறுதியில் பிரஞ்சு வீரர் ஜோ வில்பிரிட் சோங்காவை சந்திக்கிறார். சோங்கா 2008ஆம் ஆண்டு பாரிஸ் மாஸ்டர்ஸில் பட்டம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வெற்றியின் மூலம் நடால் 2019ஆம் ஆண்டில் 50 வெற்றிகளைப் பதிவு செய்த வீரர்களின் பட்டியலில் ஜோகோவிச், சிட்சிபாஸ் ஆகியோருக்கு அடுத்தபடியாக இணைந்துள்ளார்.