இந்தியாவின் நட்சத்திர டென்னிஸ் வீரரான லியாண்டர் பயஸ் இந்த ஆண்டின் இறுதியில் டென்னிஸிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். பெங்களூருவில் தற்போது ஆடவர் வீரர்களுக்கான பெங்களூரு ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்றுவருகிறது. இந்திய மண்ணில் பயஸ் பங்கேற்கும் கடைசி தொடர் இதுவாகும் என்பதால் பயஸின் ஆட்டத்தை சொந்த மண்ணில் இறுதியாகக் காண ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் இருக்கின்றனர்.
நேற்று நடைபெற்ற முதல்சுற்றுப்போட்டியில் பயஸ், ஆஸ்திரேலிய வீரர் மேத்யூ அப்டேனுடன் ஜோடி, ஸ்லோவேனியாவின் பிளாஸ் ரோலா, சீனாவின் ஸிஸேன் ஸாங் ஜோடியை 7-6, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வீழ்த்தி காலிறுதிச் சுற்றுக்குள் நுழைந்தது. இதைத்தொடர்ந்து, இன்று நடைபெற்ற காலிறுதிச் சுற்றில் பயஸ் ஜோடி, ஸ்வீடனின் ஆண்ட்ரே கொரன்சன், இந்தோனேஷியாவின் கிறிஸ்டோபர் ருங்கத் ஜோடியுடன் மோதியது.
இதில், முதல் செட்டை 7-5 என்ற கணக்கில் வென்ற பயஸ் ஜோடி இரண்டாவது செட்டை 0-6 என்ற கணக்கில் இழந்தது. இதைத்தொடர்ந்து, ஆட்டத்தின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் விதமாக, மூன்றாவது செட் நடைபெற்றது. இதில், கடுமையாக போராடிய பயஸ் ஜோடி 10-7 என்ற கணக்கில் வெற்றிபெற்றது. இதன்மூலம், பயஸ் ஜோடி 7-5, 0-6, 10-7 என்ற கணக்கில் வென்று அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
இதுவரை 30 ஆண்டுகளாக டென்னிஸ் பயணத்தில் ஆடவர் இரட்டையர் பிரிவில் 54 பட்டங்கள், எட்டு கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள், கலப்பு இரட்டையர் பிரிவில் 10 கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு பட்டங்களை வென்று சரித்திரம் படைத்த பயஸ், சொந்த மண்ணில் தனது கடைசி தொடரிலும் சாம்பியன் பட்டம் வெல்வாரா என்பதே இந்திய ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இதையும் படிங்க:நியூயார்க் ஓபன் தொடரிலிருந்து இந்திய ஜோடி வெளியேற்றம்!