கோவிட்-19 பெருந்தொற்றுக் காரணமாக உலகின் அனைத்து விதமான விளையாட்டுப்போட்டிகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இதில் டென்னிஸ் விளையாட்டின் விம்பிள்டன் சாம்பியன்ஷிப் போன்ற மிக முக்கிய தொடர்களும் அடங்கும். அந்த வரிசையில் தற்போது ஐரோப்பிய அணி - உலக அணிகளுக்கு இடையே நடைபெறவிருந்த லேவர் கோப்பைத் தொடரின் நான்காவது சீசனும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து லேவர் கோப்பை டென்னிஸ் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், ”இந்தாண்டு செப்டம்பர் மாதத்தில் போஸ்டனில் நடைபெறுவதாக இருந்த லேவர் கோப்பை டென்னிஸ் தொடர், உலக டென்னிஸ் அட்டவணைகளில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக 2021ஆம் ஆண்டிற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கோவிட்-19 பெருந்தொற்றால் ஏற்பட்ட அட்டவணை மாற்றம் காரணமாக அடுத்தாண்டு செப்டம்பர் மாதம் போஸ்டன் நகரிலுள்ள டீடி கார்டனில் லேவர் கோப்பைத் தொடரின் நான்காவது சீசன் நடைபெறும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.