சர்வதேச டென்னிஸ் கூட்டமைப்பு (ஐடிஎஃப்) சார்பில் ஆடவர் டென்னிஸ் வீரர்களுக்கான டேவிஸ் கோப்பை தொடர் ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. 100 வருடத்திற்கும் மேல் பழமையான இந்தத் தொடரில் இந்தியா - பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இடையேயான போட்டி வருகின்ற நவம்பர் 29, 30 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியை பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் வீரர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் உள்ளதாகக் கூறி பாகிஸ்தானுக்கு செல்ல சில இந்திய வீரர்கள் மறுப்பு தெரிவித்தனர்.
இதனால் போட்டியை வேறு இடத்திற்கு மாற்றுமாறு சர்வதேச டென்னிஸ் கூட்டமைப்பிடம் இந்திய டென்னிஸ் சங்கம் தொடர்ந்து வலியுறுத்தியது. இதனிடையே சர்வதேச டென்னிஸ் கூட்டமைப்பு இந்தியா - பாகிஸ்தான் டேவிஸ் கோப்பை போட்டி தொடர்பான அறிவிப்பை நேற்று வெளியிட்டது.
அந்த அறிவிப்பில், சர்வதேச டென்னிஸ் கூட்டமைப்பின் சுதந்திர பாதுகாப்பு ஆலோசகர்கள் அளித்த அறிவுரையின் அடிப்படையில் டேவிஸ் கோப்பை தொடரை பாகிஸ்தானில் நடத்த வேண்டாம் என்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்தப் போட்டியை பொதுவான ஒரு இடத்தில் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் வீரர்கள், ரசிகர்கள் ஆகியோர் பாதுகாப்பாக இருப்பதற்கே ஐடிஎஃப் மற்றும் டேவிஸ் கோப்பை கமிட்டி முன்னுரிமை அளிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.