மகளிர் டென்னிஸ் போட்டியில் அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ்க்கு நிகராக சிறந்த வீராங்கனையாக திகழ்ந்தவர் மரியா ஷரபோவா. ரஷ்யாவைச் சேர்ந்த இவர், 2004இல் விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்று அசத்தினார். டென்னிஸின் உலகக்கோப்பையாக கருதப்படும் இந்தத் தொடரை வெல்லும் போது, அவருக்கு வயது 17 மட்டுமே.
அதன்பின் தனது சிறப்பான ஆட்டத்தால் 2005இல் முதல்நிலை வீராங்கனையாக வலம்வந்தது மட்டுமின்றி, அதே ஆண்டில் அமெரிக்க ஓபன் பட்டத்தையும் வென்றார். இதுவரை மகளிர் ஒற்றையர் பிரிவில் ஐந்துமுறை கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்று அசத்தியுள்ளார். இவருக்கும் செரீனா வில்லியம்ஸ்க்கும் இடையே நடைபெற்ற போட்டிகள் எப்போதும் பரபரப்புக்கு பஞ்சமே இருக்காது.
இந்த நிலையில், 2007ஆம் ஆண்டிலிருந்து அவருக்கு தொடர்ந்து தோள்பட்டையில் காயம் ஏற்பட்டதால், அவர் 2008 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியா ஓபன், அமெரிக்க ஓபன், ஒலிம்பிக்ஸ் உள்ளிட்ட தொடர்களிலிருந்து விலகினார். இதனால், அவுட் ஆஃப் ஃபார்ம் என விமர்சிக்கப்பட்ட ஷரபோவா 2012, 2014இல் பிரெஞ்சு ஓபன் பட்டத்தை வென்று கம்பேக் தந்தார்.
அதன்பின் 2016 ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் தொடரில் ஊக்கமருந்து பயன்படுத்தியதால் 15 மாதங்களுக்கு எந்த போட்டியிலும் பங்கேற்க இடைநீக்கம் செய்யப்பட்டார். தடையிலிருந்து 2017ஆம் ஆண்டில் டென்னிஸ்க்கு ரீஎன்ட்ரி தந்தாலும், தோள்பட்டையில் தொடர்ந்து ஏற்பட்ட காயத்தால், ஷரபோவால் முன்பை போல தனது ஆட்டத்தை வெளிப்படுத்தி முடியாமல் போனது.
முன்னாள் முதல்நிலை வீராங்கனையாக இருந்த அவர், இதன்விளைவாக, தற்போது 372ஆவது இடத்தில் உள்ளார். இந்நிலையில், 32 வயதான இவர் சர்வதேச டென்னிஸிலிருந்து ஓய்வுப்பெறுவதாக அறிவித்துள்ளார்.