2019ஆம் ஆண்டுக்கான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இதன் ஆடவர் ஒற்றையர் பிரிவின் முதல் அரையிறுதிப் போட்டியில் ஸ்விஸ் நட்சத்திர வீரர் ரோஜர் ஃபெடரரை எதிர்த்து ஸ்பெயின் வீரர் ரஃபேல் நடால் மோதினார்.
இந்த ஆட்டத்திற்கு டென்னிஸ் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. இந்த இருவரும் இதற்கு முன்னதாக ஆடிய 5 போட்டிகளில், அனைத்திலும் ஃபெடரர் வென்றிருந்ததால், செம்மண் தரையிலும் ஃபெடரர் வெற்றியைத் தொடர்வார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆட்டம் தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னதாக மழை பெய்த காரணத்தால், தரை சிவப்பு கம்பளம் விரித்ததைப் போல் காட்சியளித்தது. இந்த சூழலில் இரண்டு ஜாம்பவான்களும் களமிறங்கினர்.
ஆனால் ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே நடாலின் ஆட்டம் ஃபெடரரை சிந்திக்க வைத்தது. செம்மண் ஆடுகளத்தின் முடிசூடா மன்னன் எப்படி ஆடுவான் என்பதை ரசிகர்களுக்கு காட்சிப்படுத்தினார் நடால்.
முதல் செட் ஆட்டத் தொடக்கத்திலிருந்தே தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்திய நடால், தனது அற்புதமான பேக் ஹேண்ட் ஷாட்களால் முதல் செட்டை 6-3 எனக் கைப்பற்றினார். பின்னர் நடைபெற்ற இரண்டாவது செட்டை சிறப்பாக தொடங்கி 2-0 என முன்னிலை பெற்ற ஃபெடரர், அதனையடுத்து நடாலின் ஆட்டத்தை கணிக்காமல் விட்டார். இதனால் இரண்டாவது செட்டை 6-4 எனவும், மூன்றாவது செட்டை 6-2 எனவும் நடாலே கைப்பற்றி, பிரெஞ்சு ஓபன் தொடரில் 12ஆவது முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றார்.
செம்மண் ஆடுகளத்தில் இருவரும் இதுவரை மோதிய 16 ஆட்டங்களில் 14 முறை நடால் வென்றுள்ளார்.அதேபோல் பிரெஞ்சு ஓபன் தொடரில் விளையாடிய ஆறு போட்டிகளிலும் நடால் வெற்றிபெற்றுள்ளார்.
ஜோக்கோவிக் - தீம் இடையே நடைபெறும் இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் வெல்பவர்கள் நடாலுடன் இறுதி ஆட்டத்தில் விளையாடுவார்கள்.