2020ஆம் ஆண்டுக்கான பிரெஞ்சு ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரை மே.24ஆம் தேதி தொடங்கி ஜூன் 7ஆம் தேதியோடு முடிக்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் கரோனா வைரஸ் காரணமாக உலகின் அனைத்து விளையாட்டுகளையும் ஒத்திவைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.
இதனால் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் செப்டம்பர் 20ஆம் தேதி தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. தற்போது செப்.27ஆம் தேதி தொடங்கப்படும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கனவே டென்னிஸ் வீரர்களிடம் ஆலோசனை செய்யாமல் பிரெஞ்சு ஓபன் ஒத்திவைக்கப்பட்டது அதிருப்தியை ஏற்படுத்தியது.
கரோனா வைரஸ் காரணமாக ஜூன் 29ஆம் தேதி முதல் ஜூலை 12ஆம் தேதி வரை நடக்கவிருந்த விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் ரத்து செய்யப்பட்டுள்ளது. இரண்டாம் உலகப்போர் காலகட்டத்திற்குப் பின், விம்பிள்டன் தொடர் ரத்து செய்யப்படுவது இதுவே முதல்முறையாகும்.
இதனிடையே அடுத்து நடக்கவுள்ள யுஎஸ் ஓபன், ரோஜர்ஸ் கோப்பை ஆகியவை பற்றி எந்தத் தகவல்களும் உறுதி செய்யப்படவில்லை. விம்பிள்டன் தொடருக்கான தலைமை நிர்வாக அலுவலர் ரிச்சர்ட் லூவிஸ், ''கரோனா வைரஸ் காரணமாக இந்த வருடத்தில் டென்னிஸ் நடக்காமல் போகவும் வாய்ப்புள்ளது'' எனக் கூறியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:ஓய்வை அறிவித்த பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன்!