பிரஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் மே 20ஆம் தேதி முதல் நடைபெற்றுவருகிறது. இந்தத் தொடரில் நேற்று நடைபெற்ற நான்காவது சுற்றுப்போட்டியில் சுவிட்சர்லாந்தின் நட்சத்திர வீரர் ரோஜர் ஃபெடரர் (3ஆவது ரேங்க்) அர்ஜென்டினா வீரர் லியானார்டோ மேயர் (68ஆவது ரேங்க்) ஆகியோர் மோதினர். இப்போட்டியில் ஃபெடரர் 6-2, 6-3, 6-3 என்ற நேர்செட்களில் எளிதாக மேயரை வீழ்த்தி காலிறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றார்.
இதன்மூலம் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளின் காலிறுதிப்போட்டியில் அதிக வயதில் (37) நுழைந்த வீரர் என்ற 28 வருட அமெரிக்க வீரர் ஜிம்மி கான்னர்ஸின் சாதனையை ஃபெடரர் முறியடித்துள்ளார். ஃபெடரர் காலிறுதிப் போட்டியில் சகநாட்டு வீரர் ஸ்டேன் வாவ்ரிங்காவை எதிர்கொள்கிறார்.
இதே பிரிவில் நடைபெற்ற மற்றொரு போட்டியில் உலகின் இரண்டாம் நிலை வீரரான ரஃபேல் நடால், அர்ஜென்டினா வீரர் ஜுவான் இக்னாசியோ லோன்டெரோவை 6-2, 6-3, 6-3 என்ற செட் கணக்கில் வீழ்த்தி காலிறுதிச்சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளார். அவர் காலிறுதியில் ஜப்பானின் கெய் நிஷிகோரி அல்லது ஃபிரான்சின் பெனாய்ட் பெய்ரி ஆகியோர்களில் ஒருவரை எதிர்கொள்ளவுள்ளார்.
'களிமண் தரை மன்னன்' என்றழைக்கப்படும் நடால், இதுவரை 11 முறை பிரஞ்சு ஓபனில் பட்டம் வென்றுள்ளார். எனவே இம்முறையும் பட்டத்தை வெல்லும் முனைப்பில் அவர் தனது ஆட்டத்தை வெளிப்படுத்திவருகிறார்.
அதே சமயத்தில் 2015ஆம் ஆண்டுக்கு முன் பிரஞ்சு ஓபனில் களமிறங்கியுள்ள பெடரரும் இரண்டாவது பட்டத்தைக் கைப்பற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்கள் இருவரும் அரையிறுதிப்போட்டியில் சந்திக்க வாய்ப்புள்ளதால் டென்னிஸ் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.