லேவர் கோப்பை டென்னிஸ் தொடர்ஆஸ்திரேலிய அணியின் டென்னிஸ் முன்னாள் ஜாம்பவானான ராட் லேவர் நினைவாக2017ஆம் ஆண்டு முதல் நடத்தப்பட்டுவருகின்றது.
இத்தொடரில் உலகின் நட்சத்திர வீரர்கள் ஐரோப்பா அணி, உலக அணி என இரு அணிகளில் பங்கேற்று விளையாடிவருகின்றனர்.
இதில் ஐரோப்பா அணியில் நட்சத்திர வீரர்கள் ரஃபேல் நடால், ரோஜர் பெடரர், டாமினிக் தீம், ராபர்டோ பாடிஸ்டா அகுட் ஆகியோரும், உலக அணி சார்பில் ஜான் இஸ்னர், நிக் கிர்ஜியோஸ், ஜேக் சாக் ஆகியோரும் இடம்பிடித்துள்ளனர். இத்தொடரில் ஒற்றையர் பிரிவில் ஒன்பது போட்டிகளும் இரட்டையர் பிரிவில் மூன்று போட்டிகளும் நடைபெற்றது.
இந்நிலையில் லேவர் கோப்பை டென்னிஸ் தொடரின் வெற்றியை முடிவு செய்யும் இறுதி ஆட்டம் நேற்று நடைபெற்றது. இதில் ஐரோப்பிய அணி சார்பில் அலெக்சாண்டர் ஸ்வெரேவும் உலக அணி சார்பில் மிலோஸ் ரானிக்கும் மோதினர்.
இதையும் படிங்க:டென்னிஸ்: செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் பட்டத்தை வென்ற இந்திய ஜோடி
கோப்பையைத் தீர்மானிக்கு போட்டி என்பதால் இரு அணி வீரர்களும் தங்களது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதில் முதல் செட் கணக்கை 6-4 என்ற புள்ளிகள் அடிப்படையில் ஸ்வெரேவ் கைப்பற்றினார். அதன்பின் இரண்டாவது செட்டை உலக அணி வீரர் ரானிக் 6-3 என்ற கணக்கில் கைப்பற்றி ஆட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தினார்.
கோப்பையை வெல்வது யார் என்ற விறுவிறுப்புக்கு முட்டுக்கட்டைப் போட்ட ஐரோப்பிய அணி வீரர் ஸ்வெரேவ் மூன்றாவது செட் கணக்கை 10-4 என்ற புள்ளிகள் அடிப்படையில் கைப்பற்றினார். இதன்மூலம் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் 6-4, 3-6, 10-4 என்ற செட் கணக்கில் மிலோஸ் ரானிக்கை வீழ்த்தி ஐரோப்பிய அணிக்கு கோப்பையைப் பெற்றுத்தந்தார்.
கோப்பையைக் கைப்பற்றிய ஐரோப்பிய அணி
இந்த வெற்றியின் மூலம் ஐரோப்பிய அணி 2017, 2018, 2019 என மூன்று ஆண்டுகள் தொடர்ச்சியாக லேவர் கோப்பையைக் கைப்பற்றி ஹாட்ரிக் சாதனைப்படைத்துள்ளது. உலகின் முன்னணி வீரர்களான ரஃபேல் நடால், ரோஜர் பெடரர், டாமினிக் தீம் அடங்கிய ஐரோப்பிய அணி லேவர் கோப்பையைப் பெற்றுக்கொண்டது.