நடப்பாண்டின் இறுதி கிராண்ட்ஸ்லாம் போட்டியான அமெரிக்க ஓபன் நடைபெற்று வருகிறது.
இதன் ஆடவர் அரையிறுதிப் போட்டி ஒன்றில் உலகின் முதல் நிலை வீரரான செர்பியாவின் நோவாக் ஜோகோவிக், நான்காம் நிலை வீரரான ஜெர்மனியின் அலெக்சான்டர் சுவெரேவை எதிர்கொண்டார்.
முன்னணி வீரர்கள் இருவர் மோதிக்கொண்ட இப்போட்டி ரசிகர்கள் இடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
ஜோகோவிக் போராடி வெற்றி
ஆட்டத்தின் முதல் செட்டை சுவெரேவ் 6-4 என்ற கணக்கில் கைப்பற்றி ஜோகோவிக்குக்கு அதிர்ச்சி அளித்தார். பின்னர், சுதாரித்துக்கொண்ட ஜோகோவிக், இரண்டாம் செட்டை 6-2 எனவும், மூன்றாம் செட்டை 6-4 என்ற கணக்கிலும் கைப்பற்றினார்.
இருப்பினும் ஜோகோவிக்கிற்கு நெருக்கடிதரும் விதமாக சுவெரேவ் நான்காம் செட்டை 6-4 எனக் கைப்பற்றினார்.
இருவரும் தலா இரு செட்களை கைப்பற்றிய நிலையில், ஆட்டத்தை நிர்ணயிக்கும் இறுதி செட்டில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி ஜோகோவிக் 6-2 என கைப்பற்றினார்.
இறுதியில் 4-6, 6-2, 6-4, 4-6, 6-2 என்ற செட் கணக்கில் நோவாக் ஜோகோவிக் போராடி வெற்றிபெற்று இறுதி போட்டிக்கு முன்னேறினார்.
வரலாற்று சாதனையை நோக்கி ஜோகோவிக்
அமெரிக்க ஓபன் பட்டத்தை வெல்லும்பட்சத்தில் ஆண்கள் பிரிவில் அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற வீரர் என்ற பெருமையை அவர் பெறுவார்.
இதுவரை மொத்தம் 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை ரோஜர் பெடரர், ரபேல் நடால், ஜோகோவிக் ஆகிய மூவரும் வென்று சமனில் உள்ளார்.
அத்துடன் இந்த அமெரிக்க ஓபன் பட்டத்தை ஜோகோவிக் வெல்லும்பட்சத்தில், ஆஸ்திரேலியன் ஓபன், பிரெஞ்ச் ஓபன், விம்பிளிடன், அமெரிக்க ஓபன் ஆகிய நான்கு கிராண்ட்ஸ்லாம் பட்டங்களையும் 1969ஆம் ஆண்டுக்குப்பின் ஒரே ஆண்டில் வென்ற வீரர் என்ற சாதனையைப் பெறவுள்ளார்.
இதையும் படிங்க:நீரஜ் சோப்ரா பெற்றோரின் முதல் விமானப் பயணம்: கனவை நனவாக்கிய தங்க மகன்!