இங்கிலாந்து தலைநகர் லண்டனில் இம்மாதம் 10ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை ஆடவர்களுக்கான ஏடிபி ஃபைனல்ஸ் டென்னிஸ் தொடர் நடைபெறுகிறது. முதல் எட்டு இடங்களில் உள்ள டென்னிஸ் வீரர்களுக்காக நடத்தப்படும் இந்தத் தொடரில் இரு பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்படும். இரண்டு பிரிவுகளிலும் முதலிரண்டு இடங்களைப் பிடிக்கும் வீரர்கள் அரையிறுதியில் விளையாடுவார்கள். அதைத் தொடர்ந்து இறுதிப்போட்டி நடைபெறும்.
இதனிடையே தொழில்முறை டென்னிஸ் வீரர்களின் கூட்டமைப்பான ஏடிபி நேற்று இந்த ஏடிபி ஃபைனல்ஸ் தொடரில் பங்கேற்கும் வீரர்களின் பெயரை வெளியிட்டது. இதில் ஜோர்ன் போர்க் என்ற குரூப்பில் உலகின் இரண்டாம் நிலை வீரரான செர்பியாவின் நோவாக் ஜோகோவிச், மூன்றாம் நிலை வீரரும் அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற சுவிஸ் நட்சத்திரம் ரோஜர் ஃபெடரர் ஆகியோரும் ஒரே பிரிவில் இடம்பிடித்துள்ளனர். இதனால் இவர்கள் இருவரும் இந்த தொடரில் நிச்சயம் ஒருவரையொருவர் எதிர்கொள்வார்கள். இது டென்னிஸ் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக இவர்கள் இருவரும் ஜூலை மாதம் லண்டனில் நடைபெற்ற விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் இறுதிப்போட்டியில் மோதினர். அப்போட்டியில் இருவரும் கடுமையாக போராடினர். இருப்பினும் டை பிரேக்கர் வரை சென்ற இப்போட்டியில் 7-6, 1-6, 7-6, 4-6, 13-12 என ஜோகோவிச்வெற்றி பெற்றார். சுமார் நான்கு மணி நேரம் 57 நிமிடங்களுக்கும் மேலாக நடைபெற்ற இப்போட்டியே விம்பிள்டன் வரலாற்றில் நீண்ட நேரம் நீடித்த போட்டி என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.
ஃபெடரர், ஜோகோவிச்சின் குரூப்பில் டோம்னிக் தீம்(ஆஸ்திரியா), மேட்டியோ பெரெட்டினி(இத்தாலி) ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர். அதேபோன்று ஆண்டர் அகாஸி என்ற மற்றொரு குரூப்பில் நம்பர் ஒன் வீரர் ஸ்பெயினின் ரபேல் நடால், நடப்பு சாம்பியன் அலெக்சாண்டர் ஜுவரரெவ்(ஜெர்மனி), ஸ்டெஃபானோஸ் சிட்சிபாஸ்(கிரீஸ்), டேனி மெட்வதேவ்(ரஷ்யா) ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.
ஏடிபி ஃபைனல்ஸ் தொடரில் ரபேல் நடால் தொடர்ச்சியாக 15ஆவது முறையாக நுழைந்துள்ளார். 2010, 2012 ஆகிய வருடங்கள் இரண்டாம் இடம்பிடித்த அவர் இதுவரை ஒருமுறை கூட இந்தத் தொடரில் கோப்பை வென்றதில்லை.