பாரீஸ் (பிரான்ஸ்):டென்னிஸ் கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. நேற்று (ஜூன் 11) நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இரண்டாம் அரையிறுதி ஆட்டத்தில், முதல் நிலை வீரரான நோவக் ஜோகோவிச், மூன்றாம் நிலை வீரரான ரபேல் நடால் ஆகியோர் மோதினர்.
முதலிரண்டு சுற்று
இரண்டு பெருங்கைகள் மோதியதால், ஏற்கெனவே எதிர்பார்ப்பு எகிறியிருந்தது. இதையடுத்து, முதல் சுற்றில், நடால் 6-3 என்ற செட் கணக்கில் முன்னிலை பெற, இரண்டாம் சுற்றில் ஜோகோவிச் 6-3 என்ற கணக்கில் வென்று சமன்செய்தார்.
அடுத்த சுற்றிலும் தனது ஆதிக்கத்தையேத் தொடர்ந்த ஜோகோவிச், 7-6 என்ற செட் கணக்கில் முன்னிலை பெற்றார். இந்தச் சுற்று மட்டும் சுமார் 93 நிமிடங்கள் நீடித்துள்ளது.
பாரீஸில் இரவு 11 மணிவரை தான் பொதுமக்களுக்கு வெளியில் செல்ல அனுமதியுள்ளது. இதனால், போட்டியின் பாதியிலேயே வெளியேற வேண்டுமோ என ரசிகர்கள் பதறிக் கொண்டிருக்க, போட்டி முடியும்வரை ரசிகர்கள் இருக்கலாம் என்று அறிவிப்பு, அனல்பறந்த போட்டியில் மேற்கொண்டு சூட்டையேற்றியது.