டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடர் கண்டங்கள் ரீதியாக நடைபெற்றுவருகிறது. இதில், ஆசிய ஓசேனியா குரூப் 1 பிரிவில் இடம்பெற்ற இந்திய அணி, பாகிஸ்தானுடன் மோதியது. கஜகஸ்தான் தலைநகர் நூர் சுல்தானில் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கிய இப்போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சுமித் நாகல், ராம்குமார் ராமநாதன் ஆகியோர் வெற்றிபெற்றதால், இந்தியா 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.
இதையடுத்து, நேற்று நடைபெற்ற இரட்டையர் பிரிவுக்கான போட்டியில் இந்தியாவின் லியாண்டர் பயஸ் - ஜீவன் நெடுஞ்செழியன் இணை 6-1, 6-3 என்ற நேர் செட் கணக்கில் பாகிஸ்தானின் முகமது சோயிப் - ஹுபைஸ் ரஹ்மான் ஜோடியை தோற்கடித்தது. டேவிஸ்கோப்பை தொடரில் இரட்டையர் பிரிவில் பயஸ் வெல்லும் 44ஆவது வெற்றி இதுவாகும். இதன் மூலம், டேவிஸ்கோப்பையில் இரட்டையர் பிரிவில் அதிக வெற்றிகளை பெற்ற வீரர் என்ற சாதனையை லியாண்டர் பயஸ் படைத்துள்ளார். இதனால் இத்தாலியின் நிக்கோலா பீட்ரஞ்சலி (42 வெற்றி) சாதனை முறியடிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து நடைபெற்ற இறுதி ஒற்றையர் பிரிவு போட்டியில் இந்தியாவின் சுமித் நாகல், பாகிஸ்தானின் யூசுப் கீலலுடன் பலப்பரீட்சை நடத்தினார். இதில், சிறப்பான ஆட்டத்திறனை வெளிப்படுத்திய சுமித் நாகல் 6-1, 6-0 என்ற கணக்கில் யூசுப்பை வீழ்த்தினார்.