நியூயார்க் (அமெரிக்கா): நடப்பாண்டின் இறுதி கிராண்ட்ஸ்லாம் போட்டியான அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் முதல் சுற்று போட்டிகள் கடந்த ஆகஸ்ட் 30ஆம் தேதி தொடங்கியது.
இத்தொடரின், பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று (செப்.12) நடந்த இறுதிப்போட்டியில், 18 வயதான இங்கிலாந்து வீராங்கனை எம்மா ரடுக்கானு கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்று அசத்தினார். இதையடுத்து, ஆண்கள் ஒற்றையர் பிரிவுக்கான இறுதிப்போட்டி இன்று (செப்.13) அதிகாலை 1.30 மணிக்கு (இந்திய நேரப்படி) தொடங்கியது
இப்போட்டியில், உலக டென்னிஸ் தரவரிசையில் இரண்டாம் நிலை வீரரான ரஷ்யாவின் டேனியல் மெட்வெடேவ் உடன் முதல் நிலை வீரரான செர்பியாவின் நோவாக் ஜோகோவிச் மோதினார்.
ஜோகோவிச்சின் பின்னடைவு
போட்டியின் முதல் கேம்-ஐ ஜோகோவிச் தொடங்கிவைத்தார். தொடக்கத்தில் இருவருமே சற்று பதற்றமாக காணப்பட்டனர். இருப்பினும் முதல் கேமை டேனியல் மெட்வெடேவ் கைப்பற்றினார்.
அடுத்து, மெட்வெடேவ் அபாரமான சர்வீஸ்களை எதிர்கொள்ள முடியாமல் ஜோகோவிச் தொடக்கத்தில் மிகவும் தடுமாறினார். இதனால், மெட்வெடேவ் தனது சர்வீஸ் கேம்களை மிக எளிதில் கைப்பற்றினார். இதனால், வழக்கம்போல ஜோகோவிச் தனது முதல் செட்டை 4-6 என்ற கணக்கில் இழந்து பின்னடைவை சந்தித்தார்.
இரண்டாவது செட்டின் தொடக்கத்தில் சில ஆக்ரோஷ ஷாட்களை அடித்த ஜோகோவிச் தனது முதல் கேம்-ஐ எளிதில் வென்றார். கடந்த செட்டை போலவே இந்த செட்டிலும் மெட்வெடேவ்வின் சர்வீஸ்களில் ஜோகோவிச் கடுமையாக திணறினார்.
ரேக்கட்டை உடைத்த ஜோகோவிச்
முதல் செட்டில் நீண்ட ரேலி (Long rally) கேம்கள் பெரிதாக இல்லை. ஆனால், இரண்டாவது செட்டில் ஜோகோவிச், மெட்வெடேவ் பல நீண்ட ரேலிகளை விளையாடினர். இருப்பினும், ஜோகோவிச்சால் மெட்வெடேவ்வின் சர்வீஸ் கேம்களை வெல்லவே முடியவில்லை.
இதில், ஒரு லாங் ரேலி கேம்-ஐ இழந்த ஜோகோவிச், தனது டென்னில் ரேக்கட்டை தரையில் அடித்து உடைத்து கடும் விரக்தியை வெளிக்காட்டினார். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மெட்வெடேவ் 6-4 என்ற கணக்கில் இரண்டாவது செட்டையையும் வென்று, தொடர்ந்து முன்னிலை பெற்றார்.