இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இரண்டாம் நிலையில் உள்ள இந்த வைரஸ் மூன்றாம் நிலையை எட்டிவிடக் கூடாது என்பதற்காக, அடுத்த மாதம் 14வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த உத்தரவு திடீரென அறிவிக்கப்பட்டதால் தினக்கூலிகள், சிறு, குறு தொழிலாளர்கள், நடுத்தர வர்கத்தினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு உதவும் வகையில், பல்வேறு தரப்பினர் தங்களால் முடிந்த தொகையைப் பிரதமரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கிவருகின்றனர். அந்தவகையில், இந்திய டென்னிஸ் நட்சத்திர வீராங்கனையான சானியா மிர்சா கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ஒரு கோடியே 25 லட்சம் ரூபாய் நிதி திரட்டியுள்ளதாகத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.