ஆஸ்திரியாவில் நடைபெற்று வரும் லின்ஸ் ஓபன் மகளிர் டென்னிஸ் தொடரின் அரையிறுதிப் போட்டியில் 15 வயதேயான அமெரிக்க வீராங்கனை கோகோ காஃப், ஜெர்மன் டென்னிஸ் வீராங்கனையான ஆண்ட்ரியா பெட்கோவிக்கை வீழ்த்தி, இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளார்.
டபிள்யூடிஏ சார்பாக நடைபெற்று வரும் லின்ஸ் ஓபன் டென்னிஸ் தொடரின் அரையிறுதிப் போட்டியில் அமெரிக்க வீராங்கனை கோகோ காஃப்-ஐ எதிர்த்து ஜெர்மன் வீராங்கனை ஆண்ட்ரியா பெட்கோவிக் ஆடினார்.
இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதலே சிறப்பாக ஆடிய கோகோ, முதல் செட்டை 6-4 எனக் கைப்பற்ற, தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது செட்டையும் 6-4 எனக் கைப்பற்றி நேர் செட்களில் வெற்றிபெற்றார். இந்த வெற்றியின் மூலம் லின்ஸ் ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற்றார்.
சர்வதேச அளவில் டபிள்யூடிஏ சார்பாக நடத்தப்படும் தொடரில் 15 வயதில் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய முதல் வீராங்கனை என்ற வரலாற்று சாதனைப் படைத்துள்ளார். சமீபத்தில் நடைபெற்ற விம்பிள்டன் தொடரில் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையான வீனஸ் வில்லியம்ஸை இவர் வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்கலாமே: விம்பிள்டன் டென்னிஸில் மீண்டும் அசத்தினார் ”கோரி கேஃப்"