அமெரிக்காவின் ஓகியோ மாகாணத்தில் உள்ள சின்சினாட்டி நகரில் சின்சினாட்டி டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இத்தொடரின் 16ஆவது சுற்றில் உலகின் முன்னணி வீராங்கனையான ஆஸ்திரேலியாவின் ஆஷ்லே பார்டி, எஸ்தோனியாவின் அனெட் கொன்டாவிட்டை எதிர்கொண்டார்.
முதல் செட்டை 6-4 என்ற கணக்கில் ஆஷ்லேவை வீழ்த்தி கொன்டாவிட் கைப்பற்றினார். பின்னர் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆஷ்லே 4-6, 7-5, 7-5 என்ற நேர் செட் கணக்கில் கொன்டாவிட்டை வீழ்த்தி காலிறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றார்.
மற்றொரு போட்டியில் உலகின் மூன்றாம் நிலை வீரங்கனையான செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா, ஸ்வீடனைச் சேர்ந்த ரெபேக்கா பீட்டர்சன்னை எதிர்கொண்டார்.
விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் கரோலினா 7-5, 6-4 என்ற செட் கணக்கில் ரெபேக்காவை வீழ்த்தி காலிறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றார்.
அதன்படி, காலிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவின் ஆஷ்லே பார்டி, கிரீஸ் நாட்டின் மரியா சக்கரியை எதிர்கொள்கிறார். மற்றொரு போட்டியில் செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா, ரஷ்யாவின் ஸ்வெட்லானா குஸ்நெட்சோவாவை எதிர்கொள்கிறார்.