நடப்பு ஆண்டின் இறுதி கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரான யு.எஸ் ஓபன் தொடர் நியூயார்க்கில் நடைபெற்று வருகிறது. இதில், மகளிர் ஒற்றையர் பிரிவில் அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ் 10ஆவது முறையாக இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார். இந்நிலையில், இன்று நடைபெற்ற மற்றொரு அரையிறுதிப் போட்டியில் கனடாவின் பியான் ஆன்ட்ரீஸ்கூ (Bianca Andreescu), சுவிட்சர்லாந்தின் பெலின்டா பென்சிக் உடன் பலப்பரீட்சை நடத்தினார்.
#USOpen: இறுதிச் சுற்றில் செரினாவை எதிர்கொள்ளும் 19 வயது இளம் வீராங்கனை! - US Open Finals
யு.எஸ் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் கனடா வீராங்கனை பியான்கா ஆன்ட்ரீஸூ, செரினா வில்லியம்ஸை எதிர்கொள்கிறார்.
டைபிரேக்கர் முறையில் ஆன்ட்ரீஸ்கூ முதல் செட்டை 7-6 என்ற கணக்கில் கைப்பற்றினார். பின்னர் இரண்டாவது செட்டில் ஆதிக்கம் செலுத்திய ஆன்ட்ரீஸூ 7-5 என்ற கணக்கில் வென்றார். இதன்மூலம், 7-6, 7-5 என்ற நேர் செட் கணக்கில் வெற்றிபெற்று அவர் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார். நாளை மறுநாள் நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் ஆன்ட்ரீஸ்கூ செரினா வில்லியம்ஸை எதிர்கொள்கிறார்.
இதன்மூலம், கிராண்ட்ஸ்லாம் தொடரில் இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய இரண்டாவது கனடா வீராங்கனை என்ற பெருமையை பெற்றார். இதற்கு முன்னதாக, 2014 விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாமில் கனடா வீராங்கனை யூஜின் இச்சாதனை படைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.