நடப்பு சீசனுக்கான பெங்களூரு ஓபன் தொடர் பெங்களூருவில் நடைபெற்றுவருகிறது. இந்தியாவின் நட்சத்திர வீரர் லியாண்டர் பயஸ், சொந்த மண்ணில் பங்கேற்கும் கடைசி தொடர் இதுவாகும். இதனால், நேற்று நடைபெற்ற ஆடவர் இரட்டையர் பிரிவு போட்டியில் பங்கேற்ற பயஸின் ஆட்டத்தைக் காண ஏராளமான ரசிகர்கள் அரங்கத்திற்கு வருகைதந்து, அவருக்குக் கரகோஷம் எழுப்பியும் விசில் அடித்தும் தங்களது பேராதரவை வெளிப்படுத்தினர்.
பயஸின் ஆட்டத்தைக் காண மைதானத்தில் வருகைத் தந்த ரசிகர்கள் ஆடவர் இரட்டையர் பிரிவு முதல்சுற்றுப்போட்டியில் பயஸ், ஆஸ்திரேலிய வீரர் மேத்யூ அப்டேனுடன் ஜோடி, ஸ்லோவேனியாவின் பிளாஸ் ரோலா, சீனாவின் ஸிஸேன் ஸாங் ஜோடியை எதிர்கொண்டது. விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் அபாரமாக விளையாடிய பயஸ் ஜோடி 7-6, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றிபெற்று இரண்டாம் சுற்றுக்கு முன்னேறியது.
தனது 16 வயதில் டென்னிஸ் விளையாட தொடங்கி 30 ஆண்டுகளுக்கும் மேல் ஆடவர் இரட்டையர் பிரிவில் 54 பட்டங்கள், எட்டு கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள், கலப்பு இரட்டையர் பிரிவில் 10 கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு பட்டங்களை வென்று சரித்திரம் படைத்த அவர் சொந்த மண்ணில் தனது கடைசி தொடரிலும் இரட்டையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வெல்வாரா என்பதே இந்திய ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
1996இல் ஒலிம்பிக்கின் ஒற்றையர் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றதன் மூலம், ஒலிம்பிக்கில் டென்னிஸ் பிரிவில் பதக்கம் வென்ற ஒரே இந்தியர் என்ற வரலாற்றுச் சாதனையை லியாண்டர் பயஸ் படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:கோமா நிலைக்குச் சென்ற ஆஸ்திரேலிய சைக்கிள் பந்தய வீரர்