கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டிகளில் ஒன்றான புகழ்பெற்ற ஆஸ்திரேலிய ஓபன் தொடர் ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இதனிடையே அடுத்தாண்டுக்கான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் ஜனவரி 20ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 7ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 115ஆவது ஆஸ்திரேலிய ஓபன் தொடரான இதில் பங்கேற்க விரும்புபவர்கள் தங்களின் பெயரைப் பதிவு செய்வதற்கான கால அவகாசம் நேற்றுடன் நிறைவடைந்தது.
இதனிடையே இந்தத் தொடரில் பங்கேற்கவுள்ளதை முன்னணி வீரர் மற்றும் வீராங்கனைகள் உறுதி செய்துள்ளனர். அந்த வகையில் ஆடவர் பிரிவில் உலகின் முன்னணி நட்சத்திரங்களான ரோஜர் பெடரர் (சுவிஸ்), நடால் (ஸ்பெயின்), நோவாக் ஜோக்கோவிச் (செர்பியா) ஆகியோர் இதில் கலந்து கொள்கின்றனர்.
ஆஸ்திரேலிய ஓபனில் நடப்பு சாம்பியனான ஜோக்கோவிச் எட்டாவது பட்டத்தை நோக்கியும், ஃபெடரர் ஏழாவது பட்டத்தை நோக்கியும் களமிறங்குகின்றனர். இதில் நடால் ஒரே ஒரு பட்டத்தை (2009) கைப்பற்றியுள்ள நடால், இம்முறை மீண்டும் பட்டம் வெல்வாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இவர்கள் தவிர்த்து ஆடவர் பிரிவில் டோம்னிக் தீம் (ஆஸ்திரியா), டேனில் மெத்வதேவ் (ரஷ்யா), ஸ்டெப்பானோஸ் சிட்சிபாஸ் (கிரீஸ்), அலெக்சாண்டர் ஜுவ்ரெவ் (ஜெர்மனி), மேட்டியோ பெரெட்டனி (இத்தாலி), ராபர்டோ பாட்டிஸ்டா அகட் (ஸ்பெயின்) ஆகியோரும் பங்கேற்கின்றனர்.