2020ஆம் ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் தொடரான ஆஸ்திரேலியன் ஓபன் தொடரின் ஆடவர் ஒற்றையர் இறுதி ஆட்டம் இன்று நடந்தது. இதில் செர்பியாவின் நட்சத்திர வீரர் ஜோகோவிச்சை எதிர்த்து ஆஸ்திரியாவின் டாமினிக் தீம் ஆடினார்.
இறுதிப்போட்டிக்கு முன்னதாக டாமினிக் தீம் அரையிறுதியில் ஸ்வெரவையும், காலிறுதியில் நடாலையும் வீழ்த்திருந்ததால், ஜோகோவிச் உடனான போட்டி ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
மறுபக்கம் ஜோகோவிச் அரையிறுதியில் நட்சத்திர வீரர் ஃபெடரரை வீழ்த்தியிருந்ததால், இறுதிப் போட்டியில் ஜோகோவிச் எளிதாக வெற்றிபெறுவார் என்ற எண்ணங்கள் ரசிகர்களிடையே சமூக வலைதளங்களில் பிரதிபலித்தது.
பின்னர் ஆட்டம் தொடங்கப்பட்டது. அதில் ஜோகோவிச் டாஸ் வெல்ல, முதல் செர்வை ஜோகோவிச் தொடங்கினார். முதல் செட் ஆட்டத்தில் முதல் புள்ளியை ஜோகோவிச் கைப்பற்ற, ரசிகர்கள் ஆர்ப்பரிக்கத் தொடங்கினர். அதனைத் தொடர்ந்து 3-0 என ஜோகோவிச் முன்னிலைப் பெற, பின்னர் டாமினிக் தீம் 3-1 என முதல் புள்ளியைப் பெற்றார்.
பின்னர் இது 4-2, 4-3, 4-4 என்ற நிலைக்கு வந்தது. இதனால் ரசிகர்களின் கரவொலி ஒவ்வொரு புள்ளிக்கும் எதிரொலித்தது. இறுதியாக ஜோகோவிச் 6-4 என முதல் செட்டைக் கைப்பற்றி, வெற்றியில் தன்னை முன்னிலைப்படுத்திக் கொண்டார்.
இதையடுத்து இரண்டாவது செட் ஆட்டம் தொடங்கியது. இந்த செட்டில் டாமினிக் ஜோகோவிச்சிற்கு இணையான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தினார். இதனால் டாமினிக் தீம் 4-2 என முன்னிலைப் பெற, ஜோகோவிச் 4-4 என்ற நிலைக்கு பின்தொடர்ந்துவந்தார். பின்னர் ஆக்ரோஷமாக ஆடிய டாமினிக் தீம் 6-4 என இரண்டாவது செட்டைக் கைப்பற்ற, ஆட்டத்தில் பரபரப்பு பற்றிக்கொண்டது.
முதல் செட் ஆட்டத்தில் ஏற்பட்ட தோல்வியை, இரண்டாவது செட் ஆட்டத்தில் டாமினிக் தீம் சரிசெய்ய, மூன்றாவது செட் ஆட்டம் தொடங்கியது. இதிலும் டாமினிக் தீம் 4-0 என முன்னிலைப் பெற, பின் ஜோகோவிச் 1-4 என முதல் புள்ளியைப் பெற்றார்.