இந்த ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் தொடரான ஆஸ்திரேலியன் ஓபன் தொடரின் இரண்டாவது சுற்று ஆட்டம் இன்று தொடங்கியது. இதன் மகளிர் ஒற்றையர் பிரிவில் அமெரிக்காவின் கோகோ காஃபை எதிர்த்து, ரோமானிய வீராங்கனை சொரானா கிறிஸ்டியா ஆடினார்.
அமெரிக்க வீராங்கனை கோகோ, தனது முதல் சுற்றில் வீனஸ் வில்லியம்ஸை வீழ்த்தியிருந்ததால் கோகோ மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது. இதனிடையே இன்று நடந்த இரண்டாவது சுற்று ஆட்டத்தில் 6-4 என கோகோ முதல் செட்டை இழக்க, இரண்டாவது சுற்று ஆட்டம் பரபரப்பானது.
இதையடுத்து நடந்த இரண்டாவது செட் ஆட்டத்தில் அதிரடியாக ஆடிய கோகோ 6-3 என கைப்பற்றி அசத்தினார். பின் நடந்த மூன்றாவது செட் ஆட்டம், ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியது.
இரண்டாவது செட் ஆட்டத்தில் கை ஓங்கிய கோகோ, மூன்றாவது செட் தொடக்கத்தில் கிறிஸ்டியா ஆக்ரோஷத்தில் காணாமல் போனார். இதனால் 3-0 என்ற நிலை ஏற்பட்டது. இதையடுத்து நிதானமாக ஆடிய கோகோ, ஒவ்வொரு புள்ளியாக வந்தார்.
ஒரு கட்டத்தில் 3-3 என்ற நிலை ஏற்பட்டது. பின்னர் 5-5 என்ற நிலை வந்தது. தொடர்ந்து ப்ரேக் பாய்ன்ட் நிலை ஏற்பட்டபோது, பொறுமையாக ஆடிய கோகோ 7-5 என மூன்றாவது செட்டைக் கைப்பற்றி ஆஸ்திரேலியன் ஓபன் தொடரின் மூன்றாவது சுற்றுக்குத் தகுதிபெற்றார்.
அடுத்ததாக நடக்கவுள்ள மூன்றாவது சுற்று ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான நவோமி ஒசாகாவை கோகோ காஃப் எதிர்க்கவுள்ளார். நவோமியுடன் கோகோ ஆடும்போட்டி டென்னிஸ் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தப் போட்டிக்கு பிறகு கோகோ பேசுகையில், '' முதல் முறையாக ஆஸ்திரேலியன் ஓபன் தொடரில் பங்கேற்று மூன்றாவது சுற்றுக்கு முன்னேறியது மகிழ்ச்சியளிக்கிறது. ஆஸ்திரேலியாவில் எனக்கு இவ்வளவு ஆதரவு இருக்கும் என நான் எதிர்பார்க்கவில்லை. இந்தப் போட்டியில் வெற்றிபெற்றதற்கு ரசிகர்களுக்கும் பங்குண்டு. இந்தப் போட்டியின்போது எனது அப்பாவைத் தான் தொடர்ந்து கவனித்து வந்தேன். இந்த உணர்வு மகிழ்ச்சியளிக்கிறது. இதனைத் தொடர்ந்து செய்யவேண்டும்'' என்றார்.
இதையும் படிங்க: 900ஆவது வெற்றியை பதிவு செய்த ஜோகோவிச்!