நடப்பு ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் தொடர் மெல்போர்னில் நடைபெற்றுவருகிறது. இதில், ஆடவர் ஒற்றையர் பிரிவில் மூன்றாம் சுற்று போட்டியில் மெத்வதேவ், ஆஸ்திரேலியாவின் அலெக்ஸி பாப்ரினுடன் மோதினார்.
இப்போட்டியில் எந்த ஒரு சிறு தவறையும் மேற்கொள்ளாமல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மெத்வதேவ் 6-4, 6-3, 6-2 என்ற நேர் செட் கணக்கில் வெற்றிபெற்று நான்காம் சுற்றுக்கு முன்னேறினார். இதைத்தொடர்ந்து, நாளை நடைபெறவுள்ள நான்காம் சுற்றுப் போட்டியில் அவர் சுவிட்சர்லாந்தின் ஸ்டான் வாவ்ரிங்காவுடன் பலப்பரீட்சை நடத்தவுள்ளார்.
டென்னிஸ் போட்டியில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர், ஸ்பெயினின் ரஃபேல் நடால், செர்பியாவின் நோவாக் ஜோகோவிச் ஆகியோருக்கு அடுத்தப்படியாக ரஷ்யாவின் டேனில் மெத்வதேவ் சிறந்த வீரராக விளங்குகிறார். கடந்த ஆண்டு நியூயார்க்கில் நடைபெற்ற யுஎஸ் ஓபன் தொடரில் இவர் நடாலுக்கு எதிரான இறுதி போட்டியில் போராடி தோல்வியடைந்ததன் மூலம், ரசிகர்களின் கவனத்தைப் பெற்றார்.
முன்னதாக, ஆஸ்திரேலிய ஓபன் தொடங்கும் முன் நடால், ஃபெடரர், ஜோகோவிச் ஆகிய மூவரையும் வீழ்த்த ரஷ்ய வீரர் டேனில் மெத்வதேவால் முடியும் என ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் டாட் உட்பிரிட்ஜ் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:நடாலுடன் பலப்பரீட்சை நடத்தவிருக்கும் நிக் கிர்ஜியோஸ்