2021ஆம் ஆண்டிற்கான ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் தொடர் பிப்ரவரி 08ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை மெல்போர்னில் நடைபெறும் என டென்னிஸ் வல்லுநர்கள் குழு (ஏடிபி) நேற்று (டிச.18) அறிவித்தது.
இதையடுத்து இத்தொடரில் பங்கேற்கும் வீரர், வீராங்கனைகள் ஜனவரி மாதம் ஆஸ்திரேலியாவிற்கு வருகைதந்து, 14 நாள்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தனிமைப்படுத்துதல் கட்டாயம்
இந்நிலையில், ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் தொடரில் பங்கேற்கும் வீரர்கள் அனைவரும் கட்டாயம் 14 நாள்கள் மெல்போர்னில் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என விக்டோரிய மாநில அரசு இன்று அறிவித்துள்ளது.
இது குறித்து வெளியான அறிக்கையில், “டென்னிஸ் வல்லுநர்கள் குழு அளித்த தனிமைப்படுத்துதல் திட்டங்களுக்கு விக்டோரியா சுகாதார அலுவலர் ஒப்புதல் அளித்துள்ளார். அதன்படி ஆஸ்திரேலியா டென்னிஸ் கூட்டமைப்பு இத்தொடரில் பங்கேற்கும் அனைத்து வீரர்களின் பாதுகாப்பையும் உறுதிசெய்யும்.
இதனால் இத்தொடரில் பங்கேற்கும் வீரர்கள் கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளுக்குள்படுத்த வேண்டியது கட்டாயம். இதனை ஆஸ்திரேலிய டென்னிஸ் கூட்டமைப்பு உறுதிசெய்ய வேண்டும்.
அதேசமயம் தனிமைப்படுத்துதல் காலத்தை முடிக்கும் வீரர்கள் மெல்போர்ன் டென்னிஸ் மைதானத்தில் அதிகபட்சமாக ஐந்து மணி நேரம் பயிற்சி மேற்கொள்ள அனுமதிக்கப்படுவர்” என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:தரவரிசையில் முன்னேறிய இந்திய மகளிர் கால்பந்து அணி!