சீனாவில் பரவத் தொடங்கி தற்போது உலக நாடுகளை அச்சுறுத்திவரும் கோவிட் -19 வைரஸால் இதுவரை ஒன்பதாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த கோவிட் -19 வைரஸ் தொற்று பேரழிவை உண்டாக்கும் தொற்று என உலக சுகாதார மையம் தெரிவித்திருந்தது.
இதனால் பல்வேறு விளையாட்டு போட்டிகள் அடுத்த மாதம் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, ஆடவர் டென்னிஸ் வீரர்களுக்கான ஏடிபி தொடர் ஏப்ரல் 27 வரையும், மகளிர் வீராங்கனைகளுக்கான டபிள்யூ டிஏ (WTA) தொடர் மே 2 வரையும் ஒத்திவைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில், அந்த ஒத்திவைப்பு ஜூன் 7 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக ஏ.டி.பி மற்றும் ட. பள்யூ. டி ஏ இணைந்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், தற்போதைய சூழலில் ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு ரோம், மாட்ரிட், ஜெனிவா, லயான், ஸ்டாஸ்போர்க் உள்ளிட்ட நகரங்களில் ஏ.டி.பி மற்றும் ட. பள்யூ. டி ஏ தொடர் நடத்த இயலாது. அதனால், ஜூன் 8ஆம் தேதியிலிருந்து அனைத்து விதமான டென்னிஸ் தொடர்களும் திட்டமிட்டப்படி நடைபெறும் என குறிப்பிட்டப்பட்டுள்ளது.
இதனால், ஏடிபி சேலஞ்சர், ஐ.டிஎஃப் உலக டென்னிஸ் தொடரும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. முன்னதாக, மே 18 பாரிஸில் நடைபெறவிருந்த பிரெஞ்சு ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரும் செப்டம்பர் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்ட நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:பிரஞ்சு ஓபன் தொடரின் தேதி மாற்றம் சரியா? சானியா மிர்சா கேள்வி