வருடந்தோறும் ஆண்டின் முதலாவது கிராண்ட்ஸ்லாம் தொடராக ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்தாண்டு தொடக்கத்தில் நடைபெற்று முடிந்த ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் தொடரின் ஆடவர் பிரிவில் நோவாக் ஜோகோவிச்சும், மகளிர் பிரிவில் சோஃபியா கெனினும் சாம்பியன் பட்டம் வென்று அசத்தினர்.
இந்நிலையில் வருகிற 2021ஆம் ஆண்டிற்கான ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் தொடர் நெருங்கிவரும் சூழலில், கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இத்தொடருக்கான போட்டி அட்டவணை, தேதி ஏதும் வெளியிடப்படாமல் இருந்துவருகிறது. மேலும் இந்தாண்டு ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெறுமா? என்ற சந்தேகமும் எழுந்தது.
தேதி அறிவிப்பு
இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும்விதத்தில் டென்னிஸ் வல்லுநர்கள் குழு (ஏடிபி), 2021ஆம் ஆண்டிற்கான ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் தொடரின் தேதியை இன்று அறிவித்தது.
அதன்படி அடுத்தாண்டு பிப்ரவரி 8ஆம் தேதிமுதல் 21ஆம் தேதிவரை இத்தொடர் நடத்தப்படும் என அறிவித்துள்ளது. மேலும் இத்தொடரில் பங்கேற்கும் வீரர்கள் ஜனவரி மாதம் ஆஸ்திரேலியாவிற்கு வருகைதந்து, 14 நாள்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏடிபி அறிவிப்பு
இது குறித்து ஏடிபி வெளியிட்டுள்ள அறிக்கையில், “2021ஆம் ஆண்டின் முதல் ஏழு வாரங்களுக்கான மாற்றியமைக்கப்பட்ட டென்னிஸ் அட்டவணை இன்று வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி ஜனவரி 05 முதல் 13ஆம் தேதிவரை டெல்ரே பீச் ஓபன் தொடரும், ஜனவரி 10 முதல் 13ஆம் தேதிவரை ஆஸ்திரேலிய ஓபன் தொடருக்கான தகுதிச்சுற்றுப் போட்டிகளும், பிப்ரவரி 01 முதல் 05ஆம் தேதி வரை ஏடிபி கோப்பை தொடரும், பிப்ரவரி 08 முதல் 21ஆம் தேதிவரை ஆஸ்திரேலிய ஓபன் தொடரும் நடைபெறும்” என்று அறிவித்துள்ளது.
இதையும் படிங்க:பகலிரவு டெஸ்ட்: டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்!