2020ஆம் ஆண்டுக்கான ஆஸ்திரேலியன் ஓபன் தொடரின் காலிறுதிப் போட்டிகள் விறுவிறுப்பாக நடந்துவருகின்றன. இன்று நடந்த ஆடவர் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டத்தில் அனுபவ வீரர் ஸ்டான் வாவ்ரிங்காவை எதிர்த்து ஜெர்மன் இளம் வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரவ் ஆடினார்.
தொடக்கத்தில் ஆக்ரோஷமாக ஆடிய வாவ்ரிங்கா முதல் செட்டை 6-1 என அபாரமாகக் கைப்பற்றி அசத்தினார். இந்தத் தொடரில் இதுவரை இளம் வீரர் ஸ்வெரவ் ஒரு செட்டை கூட இழக்காமல் காலிறுதிக்கு முன்னேறிய நிலையில், காலிறுதி ஆட்டத்தில் முதல் செட்டை 24 நிமிடங்களிலேயே இழந்தது ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.
அலெக்ஸாண்டர் ஸ்வெரவ் vs ஸ்டான் வாவ்ரிங்கா பின்னர் தனது ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்வெரவ் இரண்டாவது செட்டை 6-3 எனக் கைப்பற்றி பதிலடி கொடுத்தார். பின்னர் நடந்த மூன்றாவது செட்டில் தொடர்ந்து சிறப்பாக ஆடிய ஸ்வெரவ் 6-4 எனவும் நான்காவது செட்டில் 6-2 எனவும் கைப்பற்றி ஆஸ்திரேலியன் ஓபன் தொடரின் அரையிறுதிச் சுற்றுக்குத் தகுதிபெற்றார்.
ஆடவர் பிரிவின் கடைசி காலிறுதிப் போட்டியில் நட்சத்திர வீரர் ரஃபேல் நடாலை எதிர்த்து டாமினிக் தீம் ஆடவுள்ளார். இந்தப் போட்டியில் வெற்றிபெறுவோர் அரையிறுதிப் போட்டியில் ஸ்வரெவை எதிர்கொள்வார்கள்.
இதையும் படிங்க: ஆஸ்திரேலியன் ஓபன்: 36 வருடங்களுக்குப் பிறகு அரையிறுதிச்சுற்றுக்கு முன்னேறிய ஆஸ்திரேலிய வீராங்கனை!