சர்வதேச டென்னிஸ் கூட்டமைப்பால் நடத்தப்படும் மகளிருக்கான ஃபிலிப் ஐஸ்லாண்ட் கோப்பை டென்னிஸ் தொடர் ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் நடைபெற்றது.
இன்று (பிப்.19) நடைபெற்ற மகளிர் இரட்டையர் பிரிவு இறுதிச்சுற்றில் இந்தியாவின் அங்கிதா ரெய்னா, ரஷ்யாவின் கமிலா ராக்கிமோவா இணை, ரஷ்யாவின் அண்ணா பிளிங்கோவா, அனஸ்தேசியா பொட்டபோவா இணையை எதிர்கொண்டது.
இப்போட்டியின் முதல் செட்டை பிளிங்கோவா இணை 6-2 என்ற கணக்கில் கைப்பற்றி அங்கிதா இணைக்கு அதிர்ச்சியளித்தது. பின்னர் சுதாரித்து விளையாடிய அங்கிதா இணை இரண்டாவது செட்டை 6-4 என்ற கணக்கில் கைப்பற்றி பதிலடி கொடுத்தது.
இதையடுத்து ஆட்டத்தின் வெற்றியாளரைத் தீர்மானிக்கு மூன்றாம் செட் ஆட்டத்தில் இரு அணிகளும் சரிக்குச் சமமாக மோதியதால் போட்டியில் பரபரப்பு தொற்றிக்கொண்டது.
இறுதியில் அங்கிதா இணை 10-7 என்ற கணக்கில் மூன்றாவது செட்டை கைப்பற்றியது. இதன் மூலம் இந்தியாவின் அங்கிதா ரெய்னா இணை 2-6, 6-2, 10-7 என்ற செட் கணக்குகளில் பிளிங்கோவா இணையை வீழ்த்தி, ஃபிலிப் ஐஸ்லாண்ட் கோப்பை தொடரில் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றி அசத்தியது.
இதன் மூலம் இந்தியாவின் அங்கிதா ரெய்னா சர்வதேச டென்னிஸ் விளையாட்டில் தனது முதல் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சாம்பியன்ஸ் லீக்: ஜுவென்டஸை பந்தாடியது எஃப்சி போர்டோ!