EuropeanOpen2019: டென்னிஸில் ஆடவர் பிரிவில் ரோஜர் ஃபெடரர், ரஃபேல் நடால், நோவாக் ஜோகோவிச் ஆகியோருக்கு அடுத்தபடியாக சிறந்த வீரராகத் திகழ்ந்தவர், கிரேட் பிரிட்டனைச் சேர்ந்த ஆண்டி முர்ரே. இதுவரை மூன்று கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற இவர், டென்னிஸ் தரவரிசைப் பட்டியலிலும் முதலிடத்தில் நிலைத்தவர். அதன் பின் காயம் காரணமாக கடந்த சில ஆண்டுகளாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியாமல் தடுமாறினார்.
தொடர்ந்து காயம் காரணமாக அவதிப்பட்டு வந்த ஆண்டி முர்ரே, இந்த ஆண்டு ஜனவரியில் தான் டென்னிஸ் போட்டியில் ஒற்றையர் பிரிவிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இந்த முடிவு டென்னிஸ் ரசிகர்கள் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியது.
அதனைத் தொடர்ந்து அவர் தனது ஓய்வைத் தள்ளி வைத்து சில டென்னிஸ் தொடர்களில் பங்கேற்றார். ஆனால், அவரின் ஆட்டம் சொல்லிக்கொள்ளும் அளவில் அமையவில்லை. அதன் பின் தற்போது நாடந்து வந்த ஐரோப்பிய ஓபன் டென்னிஸ் தொடரில் பங்கேற்றார். இத்தொடரில் சிறப்பாக விளையாடிய முர்ரே டென்னிஸில் மீண்டும் கம்பேக் கொடுத்தார்.