துபாய்:டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 12 சுற்றுப்போட்டியில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் இன்று (அக். 31) மோதின. இப்போட்டியில், டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது.
அதன்படி, இந்திய அணிக்கு இஷான் கிஷன், ராகுல் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இருவரும் பவர்பிளே ஓவர்களிலேயே சொற்ப ரன்களில் வெளியேறினர். அடுத்து களமிறங்கிய ரோஹித் 14 (14), கோலி 9 (17), பந்த் 12 (19) ரன்களில் ஆட்டமிழந்து பெரிதும் ஏமாற்றத்தை அளித்தனர்.
பதுங்கிய பாண்டியா
அதிரடி காட்டுவார் என எதிர்பார்க்கப்பட்ட பாண்டியா 23 (24) ரன்களை மட்டும் சேர்த்து வெளியேறினார். கடைசி கட்டத்தில் ஜடேஜா சில பவுண்டரிகளை அடிக்க, இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 110 ரன்களை மட்டும் சேர்த்தது. நியூசிலாந்து சார்பில் போல்ட் 3 விக்கெட்டுகளையும், சோதி 2 விக்கெட்டுகளையும், சௌதி, மில்னே ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
111 என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய நியூ. அணிக்கு குப்தில் - டைரில் மிட்செல் இணை நிதான தொடக்கத்தை அளித்தது. குப்தில் 20 ரன்களில் பும்ராவிடம் விக்கெட்டை பறிகொடுத்தார். பின்னர், வில்லியம்சன், மிட்செல் உடன் ஜோடி சேர்ந்து ஆட்டத்தை அணியை வெற்றி நோக்கி அழைத்துசென்றார்.