அபுதாபி: டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் - 12 சுற்றில் இன்று (அக். 27) நடைபெற்ற போட்டியில், முதல் பிரிவில் இடம்பெற்றுள்ள இங்கிலாந்து - வங்கதேச அணிகள் மோதின.
அபுதாபி ஷேக் சயீத் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், டாஸ் வென்ற வங்கதேச அணி பேட்டிங் தேர்வுசெய்தது. பேட்டிங் செய்ய களமிறங்கிய வங்கதேச அணிக்கு தொடக்கம் மோசமாக அமைந்தது. லிட்டன் தாஸ், நயிம், ஷகிப் அல் ஹாசன் ஆகியோர் சொற்ப ரன்களில் வீழ்ந்தனர்.
சொற்ப ரன்களில் ஆட்டமிழந்த வங்கதேசம்
பவர்பிளே முடிவில் வங்கதேசம் 3 விக்கெட்டுகளை இழந்து 27 ரன்களை மட்டுமே எடுத்தது. பின்னர், முஸ்பிஷுபூர் ரஹிம், கேப்டன் மஹ்முதுல்லாஹ் சற்று நிலைத்து நின்று ஆடினர்.
இருப்பினும், அவர்களாலும் பெரிய அளவில் ஸ்கோரை உயர்த்த முடியவில்லை. ரஹிம் 29, ஹோசைன் 5, மஹ்முதுல்லாஹ் 19 ரன்களில் வெளியேறினர். பின்வரிசை பேட்டர்கள் சற்று அதிரடி காட்ட, வங்கதேச அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 124 ரன்களை எடுத்தது.
அதிரடி தொடக்கம்
இங்கிலாந்து சார்பில் மில்ஸ் 3 விக்கெட்டுகளையும், மொயின் அலி, லிவிங்ஸ்டன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
125 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க பேட்டர்களான ஜேசன் ராய், ஜாஸ் பட்லர் ஆகியோர் ஆரம்ப முதலே அதிரடி காட்டினர். பட்லர் 18 ரன்களில் நடையைக்கட்ட, டேவிட் மாலன், ஜேசன் ராயுடன் இணைந்து அதிரடியைத் தொடர்ந்தார்.
இதனால், இங்கிலாந்து அணி பவர்பிளே முடிவில் ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 50 ரன்களை குவித்தது. தொடர்ந்து, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ராய், 33 பந்துகளில் தனது அரைசதத்தைக் கடந்தார். இது அவரது ஏழாவது சர்வதேச டி20 அரைசதம் என்பது குறிப்பிடத்தக்கது.
முதலிடத்தில் இங்கிலாந்து
அரைசதம் அடித்த அடுத்த ஓவரிலேயே ராய் 61 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன்பின்னர், டேவிட் மாலன் - பேர்ஸ்டோவ் ஜோடி பொறுப்புடன் விளையாடினர். இதனால், இங்கிலாந்து அணி 14.1 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது. டேவிட் மாலன் 28 ரன்களுடனும், பேர்ஸ்டோவ் 8 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் அடித்த இங்கிலாந்து அணி வீரர் ஜேசன் ராய் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். முதல் பிரிவின் புள்ளிப்பட்டியில் இங்கிலாந்து அணி தான் விளையாடிய இரண்டு போட்டிகளிலும் வென்று முதலிடத்திலும், வங்கதேச அணி தான் விளையாடிய போட்டிகளிலும் தோல்வியடைந்து கடைசி இடத்திலும் உள்ளன.
இதையும் படிங்க: சர்ச்சை கருத்துக்கு கரம்கூப்பி மன்னிப்பு கேட்ட வக்கார் யூனிஸ்!