லாகூர்: ஏழாவது ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் -12 சுற்றுகள் ஓமன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இத்தொடரில், நேற்று (அக். 29) நடைபெற்ற போட்டியில் இரண்டாவது பிரிவில் இடம்பெற்றுள்ள பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின.
இப்போட்டியில், டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்து 147 ரன்களை எடுத்தது. 148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு கடைசி இரண்டு ஓவர்களில் 24 ரன்கள் தேவைப்பட்டது.
வீணாகிய ஆப்கனின் அதிரடி
கரீம் ஜனட் வீசிய 19ஆவது ஓவரிலேயே ஆசிப் அலி நான்கு சிக்ஸர்களை பறக்கவிட்டு பாகிஸ்தான் அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தார். அதுவரை, போட்டி ஆப்கானிதானின் பிடியில் இருந்த நிலையில், ஆசிப் அலி அதிரடியால் பாகிஸ்தானுக்கு கைமாறிவிட்டது.
இந்தப் போட்டிக்கு பிறகு, இரண்டாம் பிரிவின் புள்ளிப்பட்டியில் பாகிஸ்தான் அணி மூன்று போட்டிகளில் வென்று முதலிடத்திலும், ஆப்கானிஸ்தான் ஒரு வெற்றி ஒரு தோல்வியுடன் இரண்டாம் இடத்திலும் உள்ளன.
பெரும் எதிர்காலம் இருக்கிறது
இந்நிலையில், பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் போட்டி குறித்து பாகிஸ்தான் பிரதமரும், பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனுமான இம்ரான் கான் ட்வீட் ஒன்றைப் பதிவிட்டுள்ளார். அதில்," வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணிக்கு எனது வாழ்த்துகள். ஆப்கானிஸ்தான் அணியின் அதிரடி ஆட்டத்தை கண்டு வியந்துபோனேன்.
சர்வதேச கிரிக்கெட்டில் ஆப்கானிஸ்தான் அணியைப் போல ஒரு வேகமாக வளர்ந்துவரும் ஒரு அணியை நான் இதுவரை பார்த்ததில்லை. அவர்கள் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வந்தால், கிரிக்கெட்டில் அவர்களுக்கு சிறந்து எதிர்காலம் இருக்கிறது" எனப் பதிவிட்டுள்ளார். இம்ரான் கான் தலைமையில் பாகிஸ்தான் அணி 1992ஆம் ஆண்டு ஒருநாள் உலகக்கோப்பையை வென்றது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஆஸி சுழற்பந்து வீச்சாளர் ஆஷ்லே மாலெட் காலமானார்!