துபாய்: டி20 உலக கோப்பை தொடரின் சூப்பர்-12 சுற்றில் நேற்று (அக். 27) நடைபெற்ற போட்டியில் இரண்டாவது பிரிவில் இடம்பெற்றுள்ள ஸ்காட்லாந்து - நமிபியா அணிகள் மோதின.
துபாய் ஷேக் சயீத் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், டாஸ் வென்ற நமிபியா அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி களமிறங்கிய ஸ்காட்லாந்து அணி 20 ஓவர்களுக்கு 8 விக்கெட்களை இழந்து 109 ரன்களை மட்டுமே எடுத்தது.
ரூபென் அசத்தல்
அந்த அணிக்கு அதிகபட்சமாக மைக்கேல் லீஸ்க் 44, கிறிஸ் கிரீவ்ஸ் 25 ரன்களையும் எடுத்தனர். நமிபியா சார்பில் ரூபென் டிரம்பெல்மேன் 3 விக்கெட்களை கைப்பற்றினார். 110 ரன்கள் என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய நமிபியா அணி, பொறுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதனால் பவர்பிளே முடிவில் நமிபியா ஒரு விக்கெட்டை இழந்து 29 ரன்களை மட்டுமே சேர்த்தது.
கைகொடுத்த ஸ்மிட்
நமிபியா அணியின் மிடில் ஆர்டர் பேட்டர்களும் சொதப்ப, ஆட்டம் சற்று ஸ்காட்லாண்ட் பக்கம் திரும்பியது. இருப்பினும் ஜே.ஜே ஸ்மிட் சற்று அதிரடி காட்டி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். இதன்மூலம் நமிபியா அணி, 19.1 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை கடந்தது. ஜே.ஜே ஸ்மிட் 2 பவுண்டரி, 2 சிக்ஸர் உள்பட 32 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
ஆட்டத்தின் திருப்புமுனை
ஸ்காட்லாந்து சார்பில் மைக்கேல் லீஸ்க் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆட்டத்தின் திருப்புமுனையாக 4 ஓவர்களை வீசி 17 ரன்களை மட்டும் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்திய நமிபியா பந்துவீச்சாளர் ரூபென் டிரம்பெல்மேன் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்த வெற்றி மூலம் இரண்டாவது பிரிவின் புள்ளி பட்டியலில், நமிபியா அணி மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.