துபாய்:ஏழாவது ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரின் இரண்டாவது அரையிறுதி போட்டியில் பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா அணிகள் மோதின.
துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
முரட்டு பார்ட்னர்ஷிப்
அதன்படி முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணிக்கு கேப்டன் பாபர் - ரிஸ்வான் ஜோடி அபார தொடக்கத்தை அளித்தது.
இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 70 ரன்களை சேர்த்த நிலையில், பாபர் 39 (34) ரன்களுக்கு வெளியேறினார்.
ஜமான் 'ஷோ'
மறுமுனையில், ஃபகார் ஜமான், ரிஸ்வான் உடன் இணைந்து அதிரடி காட்டினார். அரைசதம் கடந்த ரிஸ்வான் 67 (52) ரன்களிலும், அடுத்து வந்த ஹசன் அலி ரன் ஏதும் இன்றியும் வெளியேறினர்.
கடைசி ஓவரில் இரண்டு சிக்சர்களை ஜமான், பறக்கவிட, பாகிஸ்தான் 20 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 176 எடுத்தது. ஜமான் 32 பந்துகளில் 4 சிக்சர்கள், 3 பவுண்டரிகள் உட்பட 55 ரன்களை எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். ஆஸ்திரேலியா சார்பில் மிட்செல் ஸ்டார்க் 2 விக்கெட்களை வீழ்த்தினார்.
ஆட்டம் கண்ட ஆஸ்திரேலியா
177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. கேப்டன் ஃபின்ச், தான் சந்தித்த முதல் பந்திலேயே ஷாகின் அப்ரிடியிடம் வீழ்ந்தார்.
சற்றுநேரம் அதிரடி காட்டிய மிட்செல் மார்ஷ் 28 (22) ரன்களிலும், ஸ்டீவன் ஸ்மித் 5 (6) ரன்களிலும் ஷதாப் கான் பந்துவீச்சில் ஆட்டமிழந்தனர்.
அரை சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட டேவிட் வார்னர் 49 ரன்கள் எடுத்தபோது, கீப்பரிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.
ஸ்டாய்னிஸ் - வேட்
ஆனால், ரீ-ப்ளேயிவ் பார்த்தபோது பந்து பேட்டில் படவில்லை என்பது உறுதியானது. டேவிட் வார்னர் ரிவியூ கேட்காமல் பெவிலியன் திரும்பினார். அடுத்து மேக்ஸ்வெல்லும் 7 ரன்களில் வெளியேற ஆஸ்திரேலியா சற்று ஆட்டம் கண்டது.
அப்போது, 6வது விக்கெட்டுக்கு ஸ்டாய்னிஸ் - மேத்யூ வேட் ஆகியோர் ஜோடி சேர்ந்தனர். இருவரும் நம்பிக்கையுடன் விளையாட ஆஸ்திரேலியா அணி சரிவிலிருந்து சற்று நிமிர்ந்தது.
இருப்பினும், ஆஸ்திரேலியாவுக்கு கடைசி 4 ஓவர்களில் 50 ரன்கள் தேவைப்பட்டது. ஹரிஸ் ராஃப் வுசிய 17வது ஓவரில் 13 ரன்களும், ஹசன் அலி வீசிய 18ஆவது ஓவரில் 15 ரன்களும் எடுக்கப்பட்டன. இதனால், கடைசி இரண்டு ஒவர்களில் 22 ரன்கள் எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
வேடின் ஹாட்ரிக் வேட்டை
இதையடுத்து, இந்த உலகக்கோப்பை மிகச் சிறந்த வேகப் பந்துவீச்சாளர்களில் ஒருவரான ஷாகின் அப்ரிடி, ஆட்டத்தின்19ஆவது ஓவரை வீச வந்தார்.
அந்த ஓவரின் மூன்றாவது பந்தில் வேட் கொடுத்த கேட்சை அசன் அலி தவறவிட்டார். அதுவரை அந்த ஓவரில் 4 ரன்கள் சேர்க்கப்பட, 9 பந்துகளுக்கு 18 ரன்கள் தேவைப்பட்டது.
இந்நிலையில், மேத்யூ வேட் அடுத்த மூன்று பந்துகளில் மூன்று சிக்சர்களை அடித்து ஆஸ்திரேலிய அணியை அசத்தலாக இறுதிப்போட்டிக்குள் நுழைய வைத்தார்.
பாகிஸ்தான் பந்து வீச்சு தரப்பில் ஷதாப் கான் 4 விக்கெட்டை கைப்பற்றினார். ஸ்டாய்னிஸ் 2 பவுண்டரிகள், 2 சிக்சர்கள் என 40 (31) ரன்களுடனும், வேட் டைரி 4 சிக்சர்களுடன் 41 (17) உங்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். மேத்யூ வேட் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2015க்குப் பின்
இதன் மூலம் வரும் ஞாயிற்றுக்கிழமை (நவ. 13) துபாயில் நடைபெற இருக்கும் இறுதிப்போட்டியில், நியூசிலாந்து உடன் ஆஸ்திரேலியா பலப்பரீட்சை நடத்த இருக்கிறது. இதுவரை இவ்விரு அணிகளும் டி20 உலகக்கோப்பையை இதுவரை வென்றதில்லை என்பதால், யார் தங்களது முதல் கோப்பையை வெல்வார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாகியுள்ளது.
இதற்கு முன் 2015ஆம் ஆண்டு ஒரு நாள் உலக கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில், நியூஸிலாந்தை வீழ்த்தி ஆஸ்திரேலியா கோப்பையை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: துபாய் விமானக் கண்காட்சியில் பங்கேற்க சென்ற இந்திய விமானப்படை